புதுடெல்லி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மூலம் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தது என டிஆர்டிஓ முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) முன்னாள் தலைவர் டாக்டர் ஜி.சதீஷ் ரெட்டி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
எந்த ஒரு நாடும் சுயசார்புடன் இருக்க வேண்டியது அவசியம். ஒரு நாடு தன்னுடைய திறன்களை வளர்த்துக்கொண்டால், அது நவீன தொழில்நுட்பங்களையும் மேம்படுத்திக் கொள்ளும். மேலும் அந்த முறைகள் இந்தியாவுக்கு மட்டுமே தெரியும் என்றால் எதிரிகளுக்கு பதிலே இருக்காது.
எதிரி நாடுகளுடனான அடுத்த போரில் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. அது இப்போது நிறைவேறி உள்ளது.
சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணைகள், விமானங்கள், ட்ரோன்கள், டி4 உள்ளிட்ட ட்ரோன் எதிர்ப்பு சாதனங்கள், ஏவுகணை எதிர்ப்பு சாதனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி பாகிஸ்தானின் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்துள்ளோம்.
மேலும் இதில் முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளன. இதுதான் நமது வெற்றிக்கு முக்கிய காரணம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தொழில்நுட்பத்தில் நாம் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறி உள்ளோம். இதுபற்றி நம் நாட்டு மக்கள் பெருமைப்படுகிறார்கள். நானும் மகிழ்ச்சி அடைகிறேன்.
சுயசார்பு இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, அதை ஊக்குவித்தார். அதன் பலன் இப்போது கிடைத்துள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். பாகிஸ்தானுடனான மோதலில் சிறப்பாக செயல்பட்டு பதிலடி கொடுத்த ராணுவத்துக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நம் நாட்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.