லக்னோ: தனது மகள் பெயரில் போலி எக்ஸ் கணக்கு தொடங்கி, அதனைக் கையாண்டு வருபவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
அகிலேஷ் யாதவ் மகளின் பெயரில் தொடங்கப்பட்டுள்ள சமூக வலைதள கணக்கில் பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் மார்பிங் செய்யப்பட்ட படங்கள் பகிரப்பட்டுள்ளன. இது குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்து 24 மணி நேரம் கடந்து விட்டது. இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சில சமூக விரோத சக்திகள் எங்கள் குடும்ப உறுப்பினர்கள், கட்சித் தலைவர்களின் ஒத்தப் பெயர்கள், படங்களை வைத்துக் கொண்டு மிகவும் கண்டிக்கத்தக்க வகையிலான சமூக ஊடக பதிவுகள் மற்றும் உள்ளடக்கத்தை வெளியிடுகின்றனர். இந்தப் படங்கள் மற்றும் பதிவுகள் மற்றும் கருத்துகளுக்கும் எங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இவை அனைத்தும் சதித்திட்டம் ஒன்றின் பகுதியாக செய்யப்படுகின்றன. இதற்கு பின்னால் சில தந்திரமான நபர்களின் அரசியல் மற்றும் பொருளாதார உள்நோக்கம் உள்ளது அல்லது யாரோ ஒருவர் அவரின் சொந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக வேறு யாரோ ஒருவரின் அறியாமையைப் பயன்படுத்திக் கொள்கிறார்.
பாஜக அரசின் சைபர் பாதுகாப்பு பிரிவு நினைத்தால், விரும்பினால் 24 மணி நேரத்தில் இல்லை 24 நிமிடத்தில் இதைச் செய்பவர்களைக் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் அது மேலிடத்து உத்தரவுக்காக காத்திருக்கிறது” என்று அகிலேஷ் தெரிவித்துள்ளார். மேலும், ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது என்று கூறி மகள் பெயரில் தொடங்கப்பட்டுள்ள எக்ஸ் கணக்கின் ஸ்க்ரீன் ஷாட்டை அவர் பகிர்ந்துள்ளார்.