கொத்துக் கொத்தாய் காய்க்கும் கொடுக்காய்ப்புளி; குவிந்து கிடக்கும் மருத்துவ பலன்கள்!

கோடைக்காலம் என்றாலே அனைவரின் நினைவிற்கும் வருவது தர்ப்பூசணியும்(watermelon) , முலாம் பழமும்(muskmelon) தான். தர்பூசணி, முலாம்பழம் போன்றே கொடுக்காய்ப்புளியும் கோடை சீசனீல் ரொம்பவும் ஃபேமஸ் ஆன ஒன்று. கோடையில் தான் இந்த காய்கள் காய்க்கும் சீசனும் கூட. மற்ற நேரங்களில் இவற்றை பார்க்க முடியாது. சென்னைப் போன்ற வட தமிழக பகுதிகளில் இதற்க்கு கொரிக்கலிக்காய் என்ற வேறொரு பெயரும் உண்டு.

கொடுக்காய்ப்புளி
கொடுக்காய்ப்புளி

நகர்ப்புற வாழ்க்கையை வாழ்பவர்கள் கொடுக்காய்ப்புளியை பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், இன்றளவும் கிராமப்புறங்களில் கொடுக்காய்ப்புளிக்கு மவுசு அதிகம். பழத்திற்கு‌ பாதுகாப்பாய் வேலி அமைத்ததுபோல மரத்தின் கிளைகள் முழுவதும் முற்கள் படர்ந்திருக்கும். இதன் முற்றிய காய்கள் பச்சை நிறத்திலும் சாப்பிடுவதற்கு துவர்ப்பு சுவையிலும், பழம் அடர் சிவப்பு நிறத்திலும் சாப்பிடுவதற்கு இனிப்பு கலந்த‌ துவர்ப்பு சுவையுடனும் இருக்கும்.

மனிதன் எதையும் போகிற போக்கில் உண்ண பழகவில்லை. எல்லாவற்றிலும் ஏதோ ஒரு மருத்துவ குணம் மறைந்திருக்கும். அப்படி இந்த கொடுக்காய்ப்புளியை உண்பதால் என்ன மருத்துவகுணம் உள்ளது என்பதை விளக்குகிறார் அரசு சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார்.

“மனிதர்கள் பெரும்பாலும் இனிப்பு, காரம் போன்ற சுவைகளையே பெரிதும் விரும்புகின்றனர். துவர்ப்பு சுவையை யாரும் பெரிதும் விரும்புவதில்லை. கொடுக்காய்ப்புளி துவர்ப்பு சுவை மிகுந்த உணவுப்பொருள்களில் ஒன்று. இப்படி ஒரு பழம் இருப்பதுகூட பலருக்கு தெரிவதில்லை.

கொடுக்காய்ப்புளி
கொடுக்காய்ப்புளி

இந்த கொடுக்காய்ப்புளியில் துவர்ப்பு சுவை நிறைந்து இருப்பதால் இவற்றை சாப்பிடும் போது வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்றவை குணமாகும். தற்போது உள்ள உணவியல் முறையால் ஏற்படக்கூடிய அல்சர் மற்றும் செரிமான மண்டலங்களில் ஏற்படக்கூடிய சிராய்வுகள் போன்றவற்றையும் சரிசெய்யும் பண்பு இந்த கொடுக்காய்ப்புளிக்கு உள்ளது. கொடுக்காய்ப்புளியை பழமாக உண்பதைவிட பிஞ்சாக இருக்கும்போது உண்டால் நல்லது. அப்போது அதில் அதிகளவு துவர்ப்பு சுவை இருக்கும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் பெரும்பாலும் பழங்கள் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பார்கள். ஆனால் இந்த கொடுக்காய்ப்புளியில் துவர்ப்பு சுவை அதிகம் உள்ளதால் நீரிழிவு நோய் உள்ளவர்களும் இதை எடுத்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் கை, கால் வீக்கம், புண் போன்றவற்றையும் இவை குணப்படுத்தும்.

மருத்துவர் வி.விக்ரம்குமார்
சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார்

கொடுக்காய்ப்புளியை சாப்பிடும் போது தொண்டை அடைப்பது போன்று இருக்கும். எனவே குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அவற்றை இடித்து பனைவெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து கொடுக்கலாம்” என்கிறார் மருத்துவர் வி.விக்ரம்குமார்.

-ர.ராஜ்குமார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.