கோவாவில் அணுமின் நிலையம் அமைப்பது ஆபத்தான பரிசோதனை: பாஜக மீது காங்கிரஸ் சாடல்

பனாஜி: கோவாவில் அணுமின் நிலையம் அமைக்கும் பாஜகவின் பரிந்துரையை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன. கடற்கரை மாநிலமான கோவா பாஜகவின் ஆபத்தான பரிசோதனைகளுக்கான ஆய்வகம் இல்லை என்று காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது.

மின்சாரம், வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் மனோகர் லால் கத்தார், தங்களுடைய பகுதிகளில் அணுமின் நிலையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, அதற்கான பரிந்துரைகளை அனுப்பும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரைத்திருப்பதாக திங்கள்கிழமை தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “கோவாவின் நகர்புற மேம்பாடு மற்றும் மின்சாரத் துறையின் மறுஆய்வுக் கூட்டத்தில் கோவாவில் அணுமின் நிலையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி விவாதிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

அமைச்சரின் இந்தக் கருத்துக்கு கோவா மாநில காங்கிரஸ் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கோவா காங்கிரஸ் தலைவர் அமித் பட்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கோவா மாநிலமானது பாரதிய ஜனதா கட்சியின் ஆபத்தான பரிசோதனைகளுக்கான ஆய்வகமில்லை. நமது அமைதியான, சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த கோவா மாநிலத்தில் அணுமின் நிலையம் அமைக்கும் மத்திய அமைச்சர் மனோகர் லால் கத்தாரின் பரிந்துரைக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாஜக அரசு ஏற்கெனவே கோவாவின் மலைகள், காடுகள், விவாசயம், ஆறுகளை அழித்துவிட்டது. தற்போது அணு உலை மூலமாக மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க விரும்புகிறது. கோவாவுக்கு எதிரான கொள்கையை நாங்கள் முழுவீச்சுடன் எதிர்ப்போம். எங்களின் நிலம், வாழ்க்கை மற்றும் சுற்றுச்சூழல் பேரங்களுக்கு அப்பாற்பட்டவை” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், கோவாவில் அணுமின் நிலையம் அமைக்கும் பரிந்துரைக்கு அம்மாநில ஆம் ஆத்மி கட்சியும் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளது. கோவா மாநில ஆம் ஆத்மி கட்சி தலைவர் அமித் பாலேகர், கர்நாடகாவின் கார்வாரிலுள்ள கைகாவில் அணுமின் நிலையம் இருக்கும்போது, கோவாவில் அணுமின் நிலையம் எதற்கு என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மத்திய, மாநில பாஜக அரசுகள் கோவாவை அழித்து விட்டன என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவொன்றில், “அப்படியான முயற்சிகள் ஏதாவது மேற்கொள்ளப்பட்டால் கோவா மாநில ஆம் ஆத்மி கட்சி அதனை எதிர்த்து கடுமையாக போராடும். கோவாவில் உள்ள லட்சக்கணக்கான சதுர கிலோ மீட்டர் நிலங்கள் தனியார் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றுக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பாஜகவினரின் நலன்களுக்காகவே செய்யப்பட்டுள்ளது. மீதமிருக்கும் இடங்களை இதுபோன்ற திட்டங்களால் அழிக்கப்படுகிறது. யாருடைய நலனுக்காக இது?” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.