இந்திய அணியின் ஜாம்பவான்களாக இருந்து வந்த விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வையை அறிவித்துள்ளனர். கடந்த வாரம் ரோகித் சர்மா ஓய்வை அறிவித்துள்ள நிலையில் நேற்று விராட் கோலியும் தன்னுடைய 36-வது வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்திய டெஸ்ட் தொடர்களில் இந்த இரண்டு வீரர்களின் தோல்வி அதிகமாக பேசப்பட்ட நிலையில் இருவரும் தற்போது ஓய்வை அறிவித்துள்ளனர். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா மோசமான ஃபார்மல் இருந்தனர்.
மேலும் படிங்க: விராட் கோலி ஓய்வு.. சச்சின் டெண்டுல்கர் உருக்கம்! என்ன சொன்னார்?
இவர்களிடமிருந்து ரன்கள் வந்திருந்தால் இந்த தொடர்களை வெற்றி பெற்றிருக்க முடியும். அடுத்ததாக ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ள நிலையில் இருவரும் எதிர்பாராத விதமாக ஓய்வை அறிவித்துள்ளனர். அஸ்வினும் ஆஸ்திரேலியா தொடருக்கு இடையே தனது ஓய்வை அறிவித்து இருந்தார். தற்போது வெளியான தகவலின் படி தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இளம் வீரர்களை டெஸ்ட் அணியில் சேர்க்க விரும்பியதால் தான் சீனியர் வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை நடைபெற்ற இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் இந்திய அணி பங்கு பெற்றது. ஆனால் இந்த முறை இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
இதன் காரணமாக அடுத்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெற இப்போது இருந்தே அதிரடி மாற்றங்களை செய்துள்ளார் கௌதம் கம்பீர் என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட மோசமான தோல்வியின் போதே விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் டெஸ்ட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற உடனேயே நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தோல்வி அவரை பெரிதும் பாதித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அணியில் சில அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. ஆனால் அவரது தலைமையில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருந்தது.
கௌதம் கம்பீர் மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் இருவரும் அணிக்குள் இளம் வீரர்களை கொண்டு வர ஆர்வமாக உள்ளனர். இதன் ஆரம்பமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா ஓய்வு அறிவித்துள்ளதால் புதிய கேப்டனாக சுப்மான் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பும்ராவிற்கு கேப்டன்ஷி பொறுப்பை கொடுக்கலாம் என்று பிசிசிஐ விரும்பினாலும் அவருக்கு ஏற்படும் காயம் பெரிய தலைவலியாக உள்ளது. இதன் காரணமாகவே கில் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை இங்கிலாந்து தொடரிலும் இந்திய அணி தோல்வி அடையும் மட்சத்தில் கௌதம் கம்பீருக்கு அது பெரும் தலைவலியாக மாறும்.
எனவே இங்கிலாந்து தொடரில் எப்படியாவது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியை தாண்டி கௌதம் கம்பீர் அதிக பொறுப்பில் உள்ளார். தோனி இந்திய அணியின் கேப்டன்சி பொறுப்பை ஏற்ற சமயத்தில் சீனியர் வீரர்களான சேவாக், ஹர்பஜன் சிங் போன்றவர்களை ஓரம் கட்டியிருந்தார். தற்போது அதே பணியில் கவுதம் கம்பீர் சீனியர் வீரர்களான அஸ்வின், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை ஓரம் கட்டியுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிங்க: ரோஹித், கோலிக்கு பின்… ஓய்வை அறிவிக்கப்போகும் இந்த 5 இந்திய வீரர்கள்!