பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் பலி – 10 பேர் கவலைக்கிடம்!

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டதட்ட 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

அமிர்தசரஸ் மாவட்டத்தின் மஜிதா ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் கள்ளச்சாராயம் அருந்தியதில் பதினைந்து பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், கிட்டத்தட்ட 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பங்கலி கலான், தரிவால், சங்கா மற்றும் மராரி கலான் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் அமிர்தசரஸ் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமிர்தசரஸ் மாவட்ட ஆட்சியர் சாக்ஷி சாவ்னி மருத்துவமனைக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்து, இறப்பு எண்ணிக்கையை உறுதிப்படுத்தினார். எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

“ஞாயிற்றுக்கிழமை மாலை அனைவரும் ஒரே இடத்தில் இருந்து மதுபானங்களை வாங்கியதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்களில் சிலர் திங்கள்கிழமை காலை இறந்தனர். உள்ளூர்வாசிகள் காவல்துறைக்கு தெரிவிக்காமல் அவர்களை தகனம் செய்தனர். சிலர் உண்மையை மறைத்து, பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பால் இறந்ததாகக் கூறினர். இறப்புகள் குறித்து திங்கள்கிழமை தாமதமாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது,” என்று மஜிதா ஒன்றிய அதிகாரி ஆப்தாப் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், முக்கிய சப்ளையர்களான பிரப்ஜித் சிங், சாஹிப் சிங் ஆகிய இருவர், சப்ளையர்களிடமிருந்து கள்ளச்சாராயத்தை வாங்கி கிராமங்களுக்கு விநியோகித்த நான்கு குற்றவாளிகள் என 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2020 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பஞ்சாபின் டர்ன் தரன், குர்தாஸ்பூர் மற்றும் அமிர்தசரஸ் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த சுமார் 130 பேர் இறந்தனர். சுமார் 10 பேர் பார்வையை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.