கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், கோவை மகளிர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையை அடுத்த பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கடந்த 2019-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது நடந்த இச்சம்பவம் தொடர்பாக முதலில் பொள்ளாச்சி போலீஸார் விசாரித்தனர். பின்னர், சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டு, பின்னர் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர். மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று (மே 13) தீர்ப்பு அளிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்து, 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்புக்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இந்த தீர்ப்பை வரவேற்று நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இதனிடையே, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என எதிர்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அதேவேளையில், இந்த வழக்கில் சிபிஐ சமர்ப்பித்த ஆதாரங்கள் சிறப்பாக இருந்ததால், அதிகபட்ச தண்டனை கிடைத்துள்ளதாக மகளிர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
சிபிஐ ஆதாரங்கள் திருப்திகரமாக இருந்ததால் நீதிமன்றம் ஏற்றது – அரசு வழக்கறிஞர் தகவல்: கோவை மகளிர் நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞர் ஜிஷா கூறும்போது, “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்த வழக்கின் ஆரம்பகால விசாரணையை பொள்ளாச்சி போலீஸார் மேற்கொண்டனர். பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, பிறகு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. உள்ளூர் போலீஸார் உதவியுடன் சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர்.
விசாரணை 2019-ல் தொடங்கியது. தற்போது சிபிஐ தரப்பில் இருந்த அனைத்து விதமான ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர். அதை நீதிமன்றம் திருப்திகரமாக ஏற்றுக் கொண்டது. தொடர்ந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு வரவேற்கக்கத்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வுக்காக நிதியுதவி கேட்டு வாதிடப்பட்டது. 6 வருட நீண்ட கால விசாரணை என்பது தவறானது. 2019-ல் வழக்கு போடப்பட்டது. பின்னர், விசாரணை நடத்தப்பட்டு, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் என்பது முக்கியமானது. தொடக்கத்தில் இருந்து முடியும் வரை அனைத்தையும் ஆராய்ந்து சிபிஐ ஆதாரங்களை சேர்த்து சமர்ப்பித்துள்ளனர். ஒருவர் கூட பிறழ் சாட்சி ஆகாமல் சாட்சியளித்தனர். பாதிக்கப்பட்டவர்களின் விவரம் வெளியே தெரியாமல் பாதுகாக்கப்பட்டது. சிபிஐ சிறப்பாக விசாரணை நடத்தியது,” என்றார்.
மேல்முறையீடு செய்வோம்: எதிர் தரப்பினரைச் சேர்ந்த வழக்கறிஞர்களில் ஒருவரான பாண்டியராஜ் செய்தியாளர்களிடம் கூறியது: “இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது என நீதிமன்றம் கூறியுள்ளது. எங்களது தரப்பில், கைது செய்யப்பட்டவர்களின் வயது, உடல்நிலை அவர்களது வயதான பெற்றோர் ஆகியவற்றை குறிப்பிட்டு தண்டனையை குறைக்க வலியுறுத்தினோம்.
வழக்கில் நேரடி சாட்சிகள் எதுவும் இல்லை என்றும் வலியுறுத்தினோம். நாங்கள் பரிசீலிக்கிறோம் என்று கூறினர். கடுமையான தண்டனை தர வேண்டும் என அரசு தரப்பில் வலியுறுத்தியிருந்தனர். நாங்கள் எங்கள் தரப்பு கருத்தை தெரிவித்தோம். கைதானவர்கள் மீது வேறு வழக்குகள் இல்லை. முக்கிய குற்றவாளிகள் தப்பிவிட்டனர் என்பன போன்ற காரணங்கள கூறினோம்.
இதனிடையே சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பின் முழு விவரம் எங்களுக்கு தெரியவில்லை. தீர்ப்பின் நகலை படித்துவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வோம். சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்” என்று அவர் கூறினார். | வாசிக்க > பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிப்பு