மீண்டும் தொடங்கும் ஐபிஎல்… எந்தெந்த வெளிநாடு வீரர்கள் விலகிறார்கள்? ஷாக்கில் ஆர்சிபி!

IPL 2025: ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் மே 7ஆம் தேதிவரை பிரச்னையின்றி நடைபெற்றது. தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக, மே 8ஆம் தேதி தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் போட்டி பாதிலேயே நிறுத்தப்பட்டது.

IPL 2025: மீண்டும் தொடங்குகிறது ஐபிஎல் 2025

இந்நிலையில், ஒரு வார காலத்திற்கு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது மே 17ஆம் தேதி மீண்டும் ஐபிஎல் தொடர் நடைபெறுகிறது. பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, மும்பை, அகமதாபாத் என 6 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. மே 18 மற்றும் மே 25 ஆகிய தேதிகளில் மட்டும் தலா 2 போட்டிகள் நடைபெறுகின்றன.

இதையடுத்து, மே 29ஆம் தேதி பிளே ஆப் சுற்று தொடங்குகிறது. மே 29இல் குவாலிஃபயர் 1, மே 30இல் எலிமினேட்டர், ஜூன் 1ஆம் தேதி குவாலிஃபயர் 2 மற்றும் இறுதிப்போட்டி ஜூன் 3ஆம் தேதி நடைபெறுகிறது. பிளே ஆப் சுற்று போட்டிகள் எங்கெங்கு நடைபெறும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் 13 லீக் போட்டிகள் மீதமுள்ள உள்ள நிலையில், சென்னை, கொல்கத்தா, இமாச்சல் பிரதேசம் தரம்சாலாவில் நடைபெற இருந்த போட்டிகள் மாற்றப்பட்டுள்ளன.

IPL 2025: வெளிநாட்டு வீரர்கள் வருவதில் சிக்கல்!

மே 9ஆம் தேதி அன்றே பல வெளிநாட்டு வீரர்களும் தங்களின் சொந்த நாட்டுக்கு திரும்பியிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர். 10 அணிகளும் தங்களின் அணிகளை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும். ரிக்கி பாண்டிங், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி மட்டும் டெல்லியில் தங்கியிருக்கிறது. அதில் யான்சன் மட்டுமே அணியில் இருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார். இதனால் பஞ்சாப் அணிக்கு பெரிய பிரச்னையில்லை. 

ஆனால், மற்ற அணிகளை பொறுத்தவரை வெளிநாட்டு வீரர்கள் இணைவதில் பெரிய சிக்கல்கள் இருக்கின்றன. ஐபிஎல் போட்டிகள் ஒருவாரக் காலம் தள்ளிப்போனதால், பல சர்வதேச போட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. ஜூன் 3ஆம் தேதி ஐபிஎல் தொடர் முடியும் நிலையில், இங்கிலாந்து – மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மே 29இல் தொடங்கி, ஜூன் 3ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

IPL 2025: இந்த 4 நாடுகளின் வீரர்களே பிரச்னை 

அதுமட்டுமின்றி வரும் ஜூன் 11ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியும் இங்கிலாந்தில் நடைபெற இருப்பதால் ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா வீரர்களும் ஐபிஎல் தொடரில் இருந்து விரைவாகவே கிளம்பி, WTC இறுதிப்போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட நினைப்பார்கள். இதன்மூலம், மேற்கு இந்திய தீவுகள், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க வீரர்கள் சிலர் ஐபிஎல் தொடரின் பிற போட்டிகளில் இருந்து விலகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐபிஎல் தள்ளிப்போனதால், தங்களின் சொந்த நாட்டுக்கு விளையாட வேண்டும் என்பதால் இந்த வீரர்கள ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவார்கள், விலகினாலும் இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. அப்படியிருக்க எந்தெந்த அணிகளில் இருந்து எந்தெந்த வீரர்கள் விலகும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை இங்கு காணலாம். சென்னை, ராஜஸ்தான், லக்னோ அணிகளுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது

IPL 2025: எந்தெந்த அணியில் யார் யார் வர வாய்ப்பில்லை?

ஆர்சிபி அணியை பொறுத்தவரை ஹேசில்வுட், இங்கிடி, ரொமாரியோ ஷெஃப்பர்ட், பில் சால்ட், ஜேக்கப் பெத்தல், லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் ஐபிஎல் தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ளது. பஞ்சாப் அணியில் யான்சன், இங்கிலிஸ்; மும்பை இந்தியன்ஸ் அணியில் கார்பின் பாஷ், ரியான் ரிக்கில்டன்; குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஜாஸ் பட்லர், ரூதர்போர்ட், ரபாடா, கோட்ஸி; டெல்லியில் மிட்செல் ஸ்டார்க், ஸ்டப்ஸ், கேகேஆர் அணியில் நோர்கியா, ஹைதராபாத் அணியில் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக போட்டிகள் தொடங்கிய பிற்பாடே தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.