இந்தியா – பாக். போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அமெரிக்க தலையீடு: மீண்டும் வலியுறுத்திய ட்ரம்ப்

சவுதி அரேபியா: இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தனது தலையீடு இருந்தது என்று மீண்டும் வலியுறுத்திப் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். “நண்பர்களே வாருங்கள் நாம் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வோம். கொஞ்சம் வர்த்தகம் செய்வோம். அணு ஆயுதங்களை விற்க வேண்டாம். நீங்கள் உருவாக்கும் அழகான பொருட்களை விற்பனை செய்வோம். இரண்டு நாடுகளிலும் சக்தி வாய்ந்த, வலிமையான, நல்ல தலைவர்கள் உள்ளனர் என்றேன்.” என்று தனது சமரசப் பேச்சு விவரத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

சவுதி அரேபியா இளவரசர் முகம்மது பின் சல்மான், டெஸ்லா சிஇஒ எலான் மஸ்க், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோர் கலந்து கொண்ட அமெரிக்க சவுதி அரேபிய முதலீட்டாளர்கள் மன்றத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியதாவது: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு சாத்தியமான அணு ஆயுதப்போரை தவிர்த்து அமைதியை நிலைநாட்ட தனது நிர்வாகம் உதவியது. போர் நடந்திருந்தால் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம்.

துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் வெளியுறவுச் செயலாளர் ரூபியோ தலையிட்டு நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தானும் உண்மையில் ஒத்துப்போயின. அவர்கள் இணக்கமாக இருக்கிறார்கள் என்று நான் எண்ணுகிறேன். நாம் அவர்களை இன்னும் கொஞ்சம் தூரம் அழைத்துச் செல்லலாம். அவர்கள் இருவரும் இணைந்து வெளியே சென்று இரவு உணவு சாப்பிடவேண்டும். அது நன்றாக இருக்கும் இல்லையா?

சில நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிக்க எனது நிர்வாகம் ஒரு வெற்றிகரமான முயற்சியை மேற்கொண்டது. அதற்காக நான் பெரும் அளவில் வர்த்தகத்தை பயன்படுத்தினேன். நான் அவர்களிடம் சொன்னேன், “நண்பர்களே வாருங்கள் நாம் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வோம். கொஞ்சம் வர்த்தகம் செய்வோம். அணு ஆயுதங்களை விற்க வேண்டாம். நீங்கள் உருவாக்கும் அழகான பொருட்களை விற்பனை செய்வோம். இரண்டு நாடுகளிலும் சக்தி வாய்ந்த, வலிமையான, நல்ல தலைவர்கள் உள்ளனர் என்றேன்.” இவ்வாறு அதிபர் ட்ரம்ப் பேசினார்.

பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடந்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானும் எதிர்தாக்குதல் நடத்தியது. இதனால், இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. நான்கு நாட்கள் நடந்த தாக்குதல்களுக்கு பின்பு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்தது.

இதனிடையே இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தில் மூன்றாம் தரப்பின் தலையீடு இல்லை என்றும், அது இரண்டு நாடுகளுக்கு இடையேயான நேரடி பேச்சுவார்த்தையால் ஏற்பட்டது என்று இந்தியா தெரிவித்திருந்தது. இந்தநிலையில் அமெரிக்க அதிபர், இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தனது தலையீடு இருந்தது என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.