ஹூக்லி: “பாகிஸ்தானிடம் பிடிபட்டிருந்த எனது மகனை மத்திய, மாநில அரசுகள் மீட்டுத் தந்திருக்கின்றன, அனைவருக்கும் நன்றி.” என்று பிஎஸ்எஃப் வீரர் பி.கே. ஷாவின் தந்தை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 23-ம் தேதி எல்லையை தாண்டியதாக பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பி.கே.ஷா இன்று (மே.14) இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில், அவரது தந்தை மற்றும் மனைவி மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
பி.கே.ஷாவின் தந்தை போலா ஷா, “மத்திய மாநில அரசுகள் எனது மகனை பாகிஸ்தானில் இருந்து மீட்டு வந்துள்ளது. இந்தத் தருணத்தில் நான் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது மகன் தொடர்ந்து நாட்டைப் பாதுகாக்கும் பணியினைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆபரேஷன் சிந்தூருக்காக நான் பிரதமர் மோடியை பாராட்டுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
பி.கே.ஷாவின் மனைவி ரஜினி ஷா, “எனது கணவர் 20 நாட்களுக்கு மேலாக பாகிஸ்தானில் இருந்திருக்கிறார். இன்று காலையில் கமாண்டிங் அதிகாரி அழைத்து அவர் இந்தியா திரும்பி விட்டார் என்று சொன்ன போது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவர் ஆரோக்கியமாகவும், நலமாகவும் இருப்பதாக அதிகாரி கூறினார். நான் எனது கணவரிடம் வீடியோ கால் மூலமாக பேசினேன். அவர் மீண்டும் என்னிடம் பேசுவார் என்று எதிர்பார்க்கிறேன்.
நான் முதல்வர் மம்தா பானர்ஜியிடமும் பேசியிருந்தேன். இந்தவாரத்தில் எனது கணவர் வீடு திரும்பி விடுவார் என முதல்வரும் உறுதி அளித்திருந்தார். அவர் எனக்கு மிகுந்த ஆதரவளித்தார், இது தொடர்பாக முதல்வர் குரல் கொடுத்தார். எனது கணவர் பாதுகாப்பாக வீடு திரும்பியதற்காக நாட்டுமக்களுக்கு நன்றி கூறுகிறேன். பஹல்காமில் கணவர்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பிரதமர் மோடி, ஆபரேஷன் சிந்தூரைத் தொடங்கினார். அதன் பின்பு எனது கணவரை வீட்டுக்கு திரும்ப அழைத்து வந்துள்ளார்” என்று தெரிவித்தார்.