புதுடெல்லி: எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட பிஎஸ்எஃப் வீரரை பாகிஸ்தான் இந்தியாவிடம் இன்று (மே.14) ஒப்படைத்தது.
கடந்த ஏப்ரல் 23-ம் தேதி எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் பி.கே.ஷா பஞ்சாப் பகுதியில் எல்லையை தாண்டியதாக பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று (மே.14) அவர் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஷா பஞ்சாப் எல்லையில் ஃபெரோஸ்பூர் பகுதியில் பாதுகாப்பில் இருந்தபோது நிழலுக்காக ஓரிடத்தில் ஒதுங்கியதாகவும், சீருடையில் ரைஃபிலுடன் இருந்த அவர் ஒதுங்கிய பகுதி பாக். எல்லையாக இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காம் தாக்குதல் நடந்த நிலையில், அடுத்த நாள் ஏப்.23-ம் தேதி பிஎஸ்எஃப் வீரர் கைதானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட பிஎஸ்எஃப் வீரரை பாகிஸ்தான் இந்தியாவிடம் இன்று (மே.14) காலை ஒப்படைத்துள்ளது.
இது தொடர்பாக பிஎஸ்எஃப் செய்தித் தொடர்பாளர் ஒருவர், “இன்று காலை 10.30 மணியளவில் அட்டாரி – வாகா எல்லை வாயிலாக, கான்ஸ்டபிள் பூர்ணம் குமார் ஷாவை பாகிஸ்தானிடம் இருந்து மீட்டுள்ளோம். எல்லை பாதுகாப்புப் படையின் தொடர் முயற்சியால் இது சாத்தியமாகியுள்ளது. இதற்காக பிஎஸ்எஃப் ரேஞ்சர்கள், பாகிஸ்தான் ரேஞ்சர்களுடன் பலகட்டமாக பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதன் நீட்சியாகவே வீரரை மீட்க முடிந்தது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், இந்திய வீரரை திரும்பப் பெறுவதற்காக ராஜஸ்தான் எல்லையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் வீரரை இந்தியா திருப்பி ஒப்படைத்ததாகவும் தகவல் இருக்கிறது.
ஆபரேஷன் சிந்தூர்: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்தது.
அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து பாகிஸ்தானும் ஏவுகணை, ட்ரோன், குண்டு வீச்சு, எல்லையில் துப்பாக்கிச் சூடு என பதில் தாக்குதலில் ஈடுபட்டது. தற்போது போர் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ சர்வதேச அளவில் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.