ஐ.பி.எல். போட்டிகளை நடத்துங்கள் ஆனால் இது மட்டும் வேண்டாம் – சுனில் கவாஸ்கர் வேண்டுகோள்

மும்பை,

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒருவார காலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள், பாதுகாப்பு முகமைகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என அறிவித்துள்ளது.

13 லீக் ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி உள்பட 4 பிளே-ஆப் சுற்று என மொத்தம் 17 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. மாற்றப்பட்ட புதிய அட்டவணைப்படி இரண்டு நாளில் இரு ஆட்டங்கள் இடம் பெறுகிறது. மே 29-ந்தேதி இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றும், மே 30-ந்தேதி வெளியேற்றுதல் சுற்றும், ஜூன் 1-ந்தேதி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றும், ஜூன் 3-ந்தேதி இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது. முந்தைய அட்டவணையுடன் ஒப்பிடும்போது 9 நாட்கள் ஆட்டம் கூடுதலாக நகர்கிறது.

ஐ.பி.எல். தொடர் மீண்டும் தொடங்குவதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த எஞ்சியுள்ள ஐ.பி.எல் போட்டிகளில் டி.ஜே. இசை மற்றும் சியர் லீடர்ஸ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,

இந்த ஐ.பி.எல் தொடரில் இதுவரை கிட்டதட்ட 60 போட்டிகள் நடைபெற்று முடிந்து விட்டன. இன்னும் 15-16 ஆட்டங்கள் தான் எஞ்சியுள்ளன. எனவே இந்த தொடரின் எஞ்சிய போட்டிகளை இசை இல்லாமலும், சியர் லீடர்ஸ் இல்லாமலும் நடத்த வேண்டும். ஏனெனில், இந்தியாவில் அண்மையில் தான் சில மோசமான சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்கள் சோகத்தில் இருக்கும். அவர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் எந்த ஒரு கொண்டாட்டமும் இன்றி இந்த ஐ.பி.எல் தொடரை நடத்தி முடிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.