புதுடெல்லி: பாகிஸ்தான் விமான தளங்களை குறிவைத்து இந்திய விமானப்படை கடந்த 10 மற்றும் 11-ம் தேதி நடத்திய தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்கள் மற்றும் ஓடுதளங்களின் செயற்கைக்கோள் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்திய நகரங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. இதற்கு பதிலடியாக இந்திய விமானப்படை கடந்த 10 மற்றும் 11-ம் தேதிகளில் பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமான தளம், சிந்து பகுதியில் உள்ள சுக்குர் விமானதளம், பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் உள்ள ரகிம் யார் கான் விமான தளம் உட்பட ராணுவ மையங்கள் பலவற்றைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இதில் சேதமடைந்த விமானதள கட்டிடங்கள் மற்றும் ஓடு பாதைகளின் செயற்கைகோள் படங்களை அமெரிக்காவின் ஏரோஸ்பேஸ் நிறுவனம் மேக்ஷர் டெக்னாலஜிஸ் வெளியிட்டுள்ளது. நூர் கான் விமான தளத்தில் ஒரு கட்டிடம் பலத்த சேதம் அடைந்துள்ளது. அதேபோல் சுக்குர் ராணுவ தளத்திலும் ஒரு கட்டிடம் சேதம் அடைந்துள்ளது.
சர்கோதா நகரில் உள்ள முசாப் விமானப்படை தளம், வடக்கு சிந்து பகுதியில் உள்ள சாபாஷ் ஜேக்கோபாபாத் விமானப்படை தளம், வடக்கு தட்டா நகரில் உள்ள போலாரி விமானப்படை தளங்களும் சேதம் அடைந்தன. ஜேகோபாபாத் விமானப்படை தளத்தில் கட்டிடம் ஒன்று சேதம் அடைந்துள்ளது. முசாப் விமானப்படை தளத்தில் ஓடுபாதை சேதம் அடைந்துள்ளது.
இந்த தாக்குதல் குறித்து இந்திய விமானப்படை அதிகாரி விங் கமாண்டர் வியோமிகா சிங் சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில் கூறினார். தற்போது அதற்கு ஆதாரமாக செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் ராணுவ மையங்களின் கட்டுப்பாட்டு மையம், பஸ்ரூர் மற்றும் சியால்கோட் விமானதளத்தில் உள்ள ரேடார் மையங்கள், ஆயுத கிடங்குகளும் சேதம் அடைந்துள்ளன.