புதுடெல்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலின் போது பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கிய துருக்கிக்கு, பதிலடி கொடுக்கும் விதமாக துருக்கி ஆப்பிளை புனே வியாபாரிகள் புறக்கணித்துள்ளனர்.
இந்தியா-பாகிஸ்தான் மோதலில் துருக்கி ட்ரோன்களை அனுப்பி பாகிஸ்தானுக்கு உதவியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கிய துருக்கிக்கு, பதிலடியளிக்கும் விதமாக துருக்கி ஆப்பிளை இந்திய வியாபாரிகள் புறக்கணித்துள்ளனர். இதன் காரணமாக துருக்கிக்கு 1000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
புனேவில் உள்ள வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவில் உள்ள ஆப்பிள் வியாபாரியான சுயோக் ஜெண்டே, “ துருக்கியில் இருந்து ஆப்பிள்களை வாங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளோம், அதற்கு பதிலாக இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், ஈரான் மற்றும் பிற பிராந்தியங்களிலிருந்து ஆப்பிள்களை வாங்க இருக்கிறோம்.
நாங்கள் எடுத்திருக்கும் இந்த முடிவு தேச பக்தி சார்ந்தது. துருக்கியில் பூகம்பம் ஏற்பட்டபோது, அவர்களுக்கு முதலில் உதவிய நாடு இந்தியா, ஆனால் அவர்கள் பாகிஸ்தானை ஆதரித்தனர்” என்று கூறினர்.
ஆபரேஷன் சிந்தூர்: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்தது.
அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து பாகிஸ்தானும் ஏவுகணை, ட்ரோன், குண்டு வீச்சு, எல்லையில் துப்பாக்கிச் சூடு என பதில் தாக்குதலில் ஈடுபட்டது. தற்போது போர் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ சர்வதேச அளவில் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.