ஆர்டிஇ திட்டம் முடங்கும் அபாயம் இருப்பதாக வழக்கு: மாணவர்கள் நலனை பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை -​ தமிழக அரசு வாதம்

நடப்பாண்டு ஆர்டிஇ திட்டம் முடங்கும் அபாயம் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே.ஈஸ்வரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான இலவச சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை தொடங்கப்படவில்லை. இந்த ஆண்டு சேர்க்கை தொடங்கப்படாத காரணத்தால் லட்சக்கணக்கான குழந்தைகள் முன் பருவ சேர்க்கையான எல்கேஜி,யூகேஜி விண்ணப்பம் அளிக்க முடியாத நிலையில் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வந்தனர். ஆனால் இந்த ஆண்டு எந்த அறிவிப்பும் இல்லாமல் இந்த திட்டம் முடங்கும் நிலையில் உள்ளது. எனவே மாணவர் சேர்க்கையை இந்த ஆண்டு உடனடியாக தொடங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், “மாணவர்களின் நலனை பாதுகாப்பதில் தமிழக அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. மனுதாரர் சொல்லித் தர வேண்டியதில்லை. இதுகுறித்து பதிலளிக்க கால அவகாசம் வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து வழக்கை அடுத்த வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.