இந்திய அணியின் இரண்டு ஜாம்பவான்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. விராட் கோலி கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்தது இருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட் அவருக்கு அவ்வளவு சிறப்பாக இருந்தது இல்லை. ஒரு வீரரின் முழு திறமை டெஸ்ட் போட்டியில் தான் தெரிய வரும். சச்சின் டெண்டுல்கர், ட்ராவிட் உட்பட பல வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில் 100க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டியில் விளையாடியும் 10,000 ரன்கள் கூட அடிக்காத வீரர்கள் உள்ளனர். அவர்கள் யார் என்று பார்ப்போம்.
விராட் கோலி
தனது குறிப்பிடத்தக்க பேட்டிங் திறன் மற்றும் தலைமைப் பண்புகளுக்காக அறியப்பட்ட புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் விராட் கோலி 12 மே 2025 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். டெஸ்ட் வாழ்க்கையில் 123 போட்டிகளில் விளையாடி 30 சதங்கள் உட்பட மொத்தம் 9,230 ரன்களைக் குவித்துள்ளார். 2010 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் சிறப்பாக விளையாடி வந்தார். ஆனால் அதன் பிறகு ரன்கள் அடிக்க சிரமப்பட்டார். இதனால் அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை எட்ட முடியவில்லை.
இன்சமாம்-உல்-ஹக்
பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் தனது சிறப்பான பேட்டிங் மூலம் மிகவும் புகழ் பெற்றார். 120 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 25 சதங்கள் உட்பட மொத்தம் 8,830 ரன்கள் அடித்துள்ளார். 49.60 சராசரியில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 329 ரன்கள் ஆகும். பாகிஸ்தானின் கிரிக்கெட் வரலாற்றில் இன்சமாம்-உல்-ஹக் பங்கு மிகவும் முக்கியமானது. 2003 முதல் 2007 வரை அணியின் கேப்டனாக இருந்து பல வெற்றிகளை கொடுத்துள்ளார். ஆனாலும் டெஸ்டில் 10,000 ரன்களை அடிக்க முடியவில்லை.
விவிஎஸ் லக்ஷ்மண்
மற்றொரு இந்திய வீரரான விவிஎஸ் லக்ஷ்மண் டெஸ்டில் 10,000 ரன்களை அடிக்க தவற விட்டுள்ளார். விவிஎஸ் லட்சுமண் 134 டெஸ்டில் விளையாடி 17 சதங்களுடன் 8,781 ரன்கள் குவித்துள்ளார். 2001ம் ஆண்டு கொல்கத்தாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான புகழ்பெற்ற 281 ரன் போன்ற முக்கியமான தருணங்களில் அவரது குறிப்பிடத்தக்க இன்னிங்ஸிற்காக பிரபலமானார். டெஸ்டில் மிடில் ஆர்டரில் களமிறங்குவதால் அவரால் அடிக்க முடியாமல் போனது.
ஏபி டி வில்லியர்ஸ்
தென்னாபிரிக்க வீரரான ஏபி டி வில்லியர்ஸ் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பல சாதனைகளை புரிந்துள்ளார். 2004 முதல் 2019 வரை சர்வதேச போட்டிகளில் விளையாடிய டி வில்லியர்ஸ் 114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,765 ரன்கள் அடித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்காக 22 சதங்களை அடித்து இருந்தாலும் டெஸ்டில் 10,000 ரன்களை கடக்க முடியவில்லை.