திருப்பத்தூர்: அடிப்படை வசதிகளின்றி அல்லாடும் ஐயங்கொல்லை மக்கள்; கோரிக்கைக்கு செவி சாய்க்குமா அரசு?

திருப்பத்தூர் அருகே உள்ள ஆண்டியப்பனூர் பஞ்சாயத்தில் 29 கிராமங்களில் ஒன்றான ஐயங்கொல்லையில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். காப்புக்காட்டில் அமைந்த இந்த கிராமத்திற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு வேறு பகுதியிலிருந்து குடியேறிய இவர்கள், ஆடு, மாடு வளர்ப்பு மற்றும் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். ஆனால், இன்று வரை இந்த கிராமத்திற்கு மின்சார வசதி இல்லாததால், மக்கள் மண்ணெண்ணெய் விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் வெளிச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இதனால், தொலைக்காட்சி, வானொலி போன்ற பொழுதுபோக்கு வசதிகள் இல்லாமல் இவர்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் விசாரித்த போது, “சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டியப்பனூர் பஞ்சாயத்து சார்பில் ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு சூரிய ஒளி விளக்குகள் (சோலார் லைட்) வழங்கப்பட்டன. ஆனால், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வீசிய பலத்த காற்று மற்றும் மழையில் இவை சேதமடைந்தன. அதைச் சரிசெய்ய மீண்டும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை . இதனால், இரவு நேரங்களில் பாம்பு, விஷப் பூச்சிகள் போன்ற அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அச்சத்துடன் வாழ்கின்றோம்.

கிராமத்தில் சிலர் செல்போன் பயன்படுத்தினாலும், அதற்கு சார்ஜ் ஏற்ற 7 கி.மீ. தொலைவில் உள்ள ஆண்டியப்பனூருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மளிகைப் பொருட்கள், அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்கு வாணியம்பாடி, திருப்பத்தூர் போன்ற நகரங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. இதற்கு 7 கி.மீ. நீளமுள்ள கரடுமுரடான சாலையைக் கடக்க வேண்டும். இந்தப் பாதையில் பாம்பாறு என்ற ஆறு ஓடுகிறது. மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவோ, கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் மருத்துவமனைக்குச் செல்லவோ, மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்குச் செல்லவோ உயிரைப் பணயம் வைத்து ஆற்றைக் கடக்க வேண்டிய நிலை உள்ளது.

மின்சார வசதி இல்லாததால், மாணவர்கள் இரவில் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படிக்கின்றனர். இதனால், 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளின் போது மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். உலகம் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது, ஆனால் எங்களுக்கு எப்போது விடியல் கிடைக்கும்?

தேர்தல் நேரங்களில் எம்பி, எம்எல்ஏ வேட்பாளர்கள் வாக்கு கேட்டு வந்து, மின்சாரம், தார்ச்சாலை, பாம்பாற்றின் மீது பாலம் அமைத்துத் தருவதாக வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால், தேர்தல் முடிந்த பிறகு எங்கள் கிராமத்தைத் திரும்பிக் கூட பார்ப்பதில்லை‌… முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊரக வளர்ச்சித்துறை, மின்சாரத் துறை உள்ளிட்ட பல அரசு அலுவலகங்களில் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த அடிப்படை வசதியும் கிடைக்கவில்லை. எங்கள் காலம் முடிந்துவிட்டது. ஆனால், எங்கள் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் இந்த இருளில் வாழக் கூடாது. மின்சாரம், சாலை, பாலம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு வழங்க வேண்டும்” என ஐயங்கொல்லை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து வட்டாட்சியர் அலுவலக பணியாளர்களிடம் விசாரித்த போது, “இப்பகுதி சார்ந்த கோரிக்கை மனுக்கள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த கிராமத்து மக்கள் 40 ஆண்டுகளுக்கு முன்பு வேறு பகுதியிலிருந்து குடியேறி தற்போது ஆடு, மாடு வளர்ப்பு மற்றும் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். நாங்களும் எங்கள் தரப்பில் உயர் அதிகாரிகளுக்கு இந்த கிராமத்தைப் பற்றி எடுத்துக் கூறியுள்ளோம். அவர்களும் விரைந்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வதாகக் கூறியிருக்கிறார்கள்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.