அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அமிர்தசரஸ் மாவட்டம் அமிர்தசரஸ் அருகே மஜிதியா பகுதியில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த கள்ளச்சாராயத்தை பங்கலி, படல்புரி, மராரி கலான், தெரேவால் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பலர் குடித்துள்ளனர்.
கள்ளச்சாராயம் குடித்த சிறிது நேரத்தில் பலர் சுருண்டு விழுந்து இறந்தனர். மொத்தம் 17 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர்.
மேலும், கள்ளச்சாராயம் குடித்து பாதிப்புக்குள்ளான 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போஸீஸ் விசாரணை: இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, சாராயம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் எத்தனால் எனும் ரசாயனத்துக்கு பதிலாக ஆன்-லைன் மூலம் வாங்கிய மெத்தனாலை கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் அனைவரும் கூலித் தொழிலாளிகள் என்று தெரியவந்துள்ள நிலையில், இதற்கு காரணமான குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என மாநில முதல்வர் பகவந்த் மான் உறுதியளித்துள்ளார்.
இதனிடையே கள்ளச்சாராயம் தயாரித்து விற்பனைச் செய்த முக்கிய குற்றவாளியான பிரப்ஜித் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் என மொத்தம் 9 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கள்ளச்சாராயத்தை விநியோகித்த ஏராளமானோர் போலீஸாரின் அதிரடி நடவடிக்கைகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4 பேர் சஸ்பெண்ட்: சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில் போலீஸ் டிஎஸ்பி அமோலக் சிங், மஜிஜா போலீஸ் நிலைய அதிகாரி (எஸ்எச்ஓ) அவ்தார் சிங், அமிர்தசரஸ் கலால்துறை மற்றும் வரிவிதிப்பு அதிகாரி உட்பட 4 பேரை அவர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மருத்துவக் குழுக்கள்: இதைத் தொடர்ந்து, அமிர்தசரஸ் மாவட்ட நிர்வாகம் சார்பில் மருத்துவக் குழுக்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள், வீடுவீடாகச் சென்று கள்ளச்சாராயம் குடித்து யாராவது பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.
ஒரே நாளில் கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் உயிரிழந்தது அமிர்தசரஸ் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் பஞ்சாப்பின் சங்குரூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல், கடந்த 2020-ல் பஞ்சாபின் தார்ன் தரண், அமிர்தசரஸ், குர்தாஸ்பூர் பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 130 பேர் உயிரிழந்தனர்.