பாகிஸ்தானிடம் சிக்கிய பிஎஸ்எஃப் வீரர் – 21 நாள் போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டது எப்படி?

சென்னை: பாகிஸ்தான் ராணுவத்தால் ஏப்ரல் 23-ம் தேதி கைது செய்யப்பட்ட பிஎஸ்எப் ஜவான் பூர்ணம் குமார் ஷா நேற்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இவரை பாகிஸ்தான் ராணுவம் எவ்வாறு நடத்தியது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) ஜவான் பூர்ணம் குமார் ஷா, ஏப்ரல் 23 அன்று பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். 21 நாட்கள் பாகிஸ்தான் காவலில் இருந்த இவர் நேற்று அமிர்தசரஸ் அட்டாரி இணைச் சோதனைச் சாவடியில் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

தற்போது, பூர்ணம் குமார் ஷா பாகிஸ்தான் ராணுவத்தால் நடத்தப்பட்டது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் பாகிஸ்தான் ராணுவத்தால் கண்கள் கட்டப்பட்டு, தூங்க விடாமல் தடுக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவரை பாகிஸ்தான் அதிகாரிகள் கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பூர்ணம் குமார் ஷா உடல் ரீதியாக சித்திரவதை செய்யப்படவில்லை என்றாலும், எல்லையில் உள்ள பிஎஸ்எப் நிலைகள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், அவர் பல் துலக்கக்கூட அனுமதிக்கப்படவில்லை என்றும் ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 23 அன்று ஃபெரோஸ்பூர் செக்டாரில் பணியில் இருந்த போது தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததால், அவர் பாகிஸ்தான் ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்டார். 24வது பட்டாலியனைச் சேர்ந்த ஷா, கைது செய்யப்பட்டவுடன் பாகிஸ்தானில் உள்ள மூன்று இடங்களுக்கு கண்கள் கட்டப்பட்ட நிலையில் அழைத்துச் செல்லப்பட்டார். ஒரு இடம் விமானப்படை தளத்துக்கு அருகில் இருந்துள்ளது, அங்கு அவர் விமானங்களின் சத்தங்களைக் கேட்க முடிந்ததாக சொல்லியுள்ளார்.

மேலும், ஒரு இடத்தில், அவர் சிறையிலும் அடைத்து வைக்கப்பட்டார். அப்போது எல்லையில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. பாகிஸ்தான் அதிகாரிகள், பொதுமக்கள் உடையில் ஷாவிடம் எல்லையில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியதாகவும், சர்வதேச எல்லையில் நியமிக்கப்பட்ட மூத்த அதிகாரிகள் குறித்த விவரங்களைக் கோரியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது, ஜெய்ஷ்-இ-முகமது (JeM) மற்றும் லஷ்கர்-இ-தொய்பா (LeT) குழுக்களுடன் தொடர்புடைய 9 பயங்கரவாத முகாம்களை அழித்ததைத் தொடர்ந்து, இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்ட சில நாட்களுக்குப் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அட்டாரி-வாகா எல்லையில் நேற்று இந்திய அதிகாரிகளிடம் பிஎஸ்எஃப் வீரர் பூர்ணம் குமார் ஷா ஒப்படைக்கப்பட்ட பிறகு, அவர் தனது குடும்பத்தினருடன் பேச அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் இந்திய ராணுவத்தால் முறையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன், ராணுவ நெறிமுறையின்படி பாகிஸ்தான் காவலில் இருந்தபோது அவர் அணிந்திருந்த ஆடைகள் பரிசோதிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.

மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்தைச் சேர்ந்த பி.கே.ஷா, இந்திய விவசாயிகளின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ள பிஎஸ்எப்-ன் ‘கிசான் காவல்படை’யில் ஜவானாக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.