புதுடெல்லி: பாகிஸ்தானில் உள்ள எந்த ஓர் அணு உலையில் இருந்தும் கதிர்வீச்சு கசிவு இல்லை என்று உலகளாவிய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) உறுதிபட தெரிவித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து கடந்த 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியது. இதில், 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது. இந்த தாக்குதலில், பயங்கரவாத கட்டமைப்புகள் பலத்த இழப்பைச் சந்தித்தன.
இதையடுத்து, இந்தியாவின் ராணுவ நிலைகளை குறிவைத்தும், பொதுமக்களை குறிவைத்தும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. 4 நாட்கள் நடந்த இந்த ராணுவ மோதல், பாகிஸ்தான் டிஜிஎம்ஓவின் கோரிக்கையை ஏற்று கடந்த 10-ம் தேதி முடிவுக்கு வந்தது.
எனினும், இந்த மோதலின்போது பாகிஸ்தானின் அணுசக்தி நிலையங்கள் அமைந்துள்ள கிரானா மலைகளை இந்தியா தாக்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த தாக்குதலால், அணு உலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் பலர் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தனர். அதேநேரத்தில், பாகிஸ்தானின் அணு உலைகளை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தவில்லை என்று விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி தெரிவித்தார்.
கடந்த 12-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கிரானா மலைப்பகுதியில் அணுசக்தி நிலையங்கள் இருப்பதாக நீங்கள் (செய்தியாளர்) கூறியதற்கு நன்றி. ஆனால், அங்கு அணுசக்தி நிலையங்கள் இருப்பதாக எங்களுக்குத் தெரியாது. அங்கே என்ன இருந்தாலும் சரி, அது எங்கள் இலக்கு அல்ல. நாங்கள் கிரானா மலைகளைத் தாக்கவில்லை” என்று கூறினார்.
இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள எந்தவொரு அணுசக்தி நிலையத்தில் இருந்தும் கதிர்வீச்சு கசிவு அல்லது வெளியீடு எதுவும் இல்லை என்று உலகளாவிய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) தெரிவித்துள்ளது. அதன் செய்தித் தொடர்பாளர் அளித்த பேட்டியில், “சர்வதேச அணுசக்தி முகமைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பாகிஸ்தானில் உள்ள எந்தவொரு அணுசக்தி நிலையத்தில் இருந்தும் கதிர்வீச்சு கசிவு அல்லது வெளியீடு எதுவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.