New Aadhaar App: மோடி அரசாங்கம் ஒரு புதிய ஆதார் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பயனர்கள் தங்களை டிஜிட்டல் முறையில் அங்கீகரித்து, மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் தனியுரிமையுடன் தங்கள் ஆதார் தரவை அனுப்பலாம். இது ஃபிசிக்கலாக ஆதார் அட்டைகளை வைத்திருக்க வேண்டிய அவசியத்தை அல்லது நகல்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியத்தை நீக்குகிறது. மேலும் இது டிஜிட்டல் மயமாக்கலுக்கான ஒரு பெரிய படியாக பார்க்கப்படுகின்றது.
Face ID verification: முக அடையாள சரிபார்ப்பு
புதிய செயலியின் மூலம், பயனர்கள் தங்கள் அனுமதியுடன் மட்டுமே பாதுகாப்பான டிஜிட்டல் வழிமுறைகள் மூலம் தேவைக்கேற்ப தரவைப் பகிர முடியும். இந்த செயலியில் முக அடையாள சரிபார்ப்பு வழங்கப்படுகிறது. இதன் மூலம் பாதுகாப்பு வலுப்படுவதோடு எந்த வித பிரச்சனையும் தொந்தரவுகளும் இல்லாமல் வெரிஃபிகேஷன் நடக்கிறது. இதன் மூலம் UPI கட்டணம் செலுத்துவது போல, QR குறியீட்டை ஸ்கேன் செய்தே ஆதார் சரிபார்ப்பு சாத்தியமாகியுள்ளது.
Privacy Protection: தனியுரிமை பாதுகாப்பு
இந்த செயலி வலுவான தனியுரிமை பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ஆதார் தகவல்களை நகலெடுக்கவோ, மாற்றியமைக்கவோ அல்லது தீங்கிழைக்கும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தவோ முடியாது. இதன் மூலம் தரவு பரிமாற்றம் பாதுகாப்பான முறையில் செய்யப்படுகின்றது. மேலும் பயனரின் ஒப்புதலுக்குப் பிறகுதான் தரவு பரிமாறிக்கொள்ளப்படுகிறது. ஆகையால், பயனர்கள் இனி ஹோட்டல்கள், கடைகள், விமான நிலையங்கள் அல்லது அங்கீகாரம் தேவைப்படும் பிற இடங்களில் அச்சிடப்பட்ட ஆதார் அட்டை நகல்களை வழங்க வேண்டியதில்லை, இந்த செயலியே போதுமானதாக இருக்கும்.
Beta testing: பீட்டா சோதனை
புதிய ஆதார் செயலி பீட்டா சோதனையில் உள்ளது. செயற்கை நுண்ணறிவு போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பில் ஒருங்கிணைப்பதன் மூலம், இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைக்கவும், தனியுரிமையை முதன்மையான முன்னுரிமையாக வைத்திருக்கவும் அரசாங்கம் ஆர்வமாக உள்ளது. அத்தகைய திசையில் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்துவது குறித்த யோசனைகளை வழங்க அனைத்து பங்குதாரர்களும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியது என்ன?
பல அரசாங்க முயற்சிகளுக்கு ஆதார் அட்டை ஒரு ஆதாரமாக, அதாவது அடித்தளாமாக இருக்கிறது என கூறிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைப்பதில் AI மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) ஆகியவற்றின் பங்கையும் வலியுறுத்தினார். தனியுரிமையை மையமாக வைத்துக்கொண்டு, மேலும் வளர்ச்சியை அதிகரிக்க, DPI உடன் செயற்கை நுண்ணறிவை (AI) ஒருங்கிணைப்பதற்கான வழிகளை பரிந்துரைக்குமாறு பங்குதாரர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
‘இப்போது ஒரு டேப் -இன் மூலம், பயனர்கள் தேவையான தரவுகளை மட்டும் பகிர்ந்து கொள்ள முடியும். இதனால் அவர்களின் தனிப்பட்ட தகவல்களின் மீது அவர்களுக்கு முழுமையான கட்டுப்பாடு கிடைக்கிறது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.