மதுராந்தகம்: மதுராந்தகத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் அணுகு சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த, 14 கடைகளை நகராட்சி ஆணையர் அபர்ணா தலைமையிலான பணியாளர்கள், போலீஸார் துணையுடன் இடித்து அகற்றினர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகரப் பகுதியில் பழைய வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தை அகற்றி, புதிதாக அப்பகுதியில் ரூ.1.20 கோடி மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கட்டுமான பணிகள் விரைவில் நிறைவு பெறும் நிலையில் உள்ளதால், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்வதற்கு அணுகு சாலை அமைக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால், அணுகு சாலை அமைப்பதற்கான இடத்தை ஆக்கிரமித்து 14 கடைகள் மற்றும் அலுவலகங்கள் அமைத்திருந்ததாக தெரிகிறது. இதனால், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுமாறு ஆக்கிரமிப்பாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் 6 முறை நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. அதனால், நகராட்சி ஆணையர் அபர்ணா தலைமையில், பொறியாளர் நித்யா, நகரமைப்பு ஆய்வாளர் ஜி.வேல்முருகன், பணியாளர்கள் மற்றும் வருவாய்த் துறையினர், போலீஸார் துணையோடு ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், போலீஸார் துணையுடன் பொக்லைன் இயந்திரம் மூலம் கடைகள் இடித்து அகற்றப்பட்டன. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து, மதுராந்தகம் நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பழைய வட்டாட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில், அணுகு சாலை அமைக்கும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. அதனால், சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றுமாறு, கால அவகாசம் மற்றும் 6 முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஆனாலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் நகராட்சி பணியாளர்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன. மேலும், ஆக்கிரமிப்பாளர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதால், அவரது கடையும் மற்றும் பாதுகாப்பு கருதி அதனருகே உள்ள மற்றொரு கடையின் கட்டிடங்களை அகற்றவில்லை. வழக்கின் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.