புதுடெல்லி: முன்னாள் பாதுகாப்புத் துறை செயலாளர் அஜய் குமார் இன்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) தலைவராக பொறுப்பேற்றார். இவருக்கு யுபிஎஸ்சி ஆணையத்தின் மூத்த உறுப்பினரான லெப்டினன்ட் ஜெனரல் ராஜ் சுக்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதற்கு முன்பு யுபிஎஸ்சி தலைவராக பதவி வகித்த ஐஏஎஸ் அதிகாரி ப்ரீத்தி சுதனின் பதவிக்காலம், ஏப்ரல் 29-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், யுபிஎஸ்சி-யின் புதிய தலைவராக அஜய் குமார் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் மின் பொறியியலில் பிடெக் பட்டம் பெற்ற அஜய் குமார், அமெரிக்காவின் மினசோட்டா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், அமெரிக்காவின் மினசோட்டா பல்கலைக்கழக கார்ல்சன் மேலாண்மைப் பள்ளியில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். அஜய் குமார் 1985-ஆம் ஆண்டு கேரள கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான இவர், ஆகஸ்ட் 23, 2019 முதல் அக்டோபர் 31, 2022 வரை பாதுகாப்புத் துறை செயலாளராகப் பணியாற்றியுள்ளார். 2019 ஆம் ஆண்டு அமிட்டி பல்கலைக்கழகத்தால் இவருக்கு தத்துவத்தில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
அஜய் குமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக கேரள மாநில அரசு மற்றும் மத்திய அரசின் முக்கிய பதவிகளில் பணியாற்றியுள்ளார். ‘ஜீவன் பிரமான்’ (ஓய்வூதியதாரர்களுக்கான டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்கள்), மை கவ் (myGov), பிரகதி (பிரதமரின் வீடியோ மாநாடு), பயோ-மெட்ரிக் வருகை அமைப்பு, எய்ம்ஸ்-சில் ஓபிடி பதிவு முறை, கிளவுட் ஃபர்ஸ்ட் கொள்கை போன்ற பல மின்-ஆளுமை முயற்சிகளை அறிமுகப்படுத்துவதில் அஜய் குமார் முக்கிய பங்கு வகித்துள்ளார். அதேபோல யுபிஐ, ஆதார் உள்ளிட்ட டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்புகளை 2014-இல் செயல்படுத்தியபோது அதில் முக்கிய அதிகாரியாக பங்களித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.