லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார். அத்துடன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் சுமித் மற்றும் விராட் கோலி ஆகியோர் நவீன கிரிக்கெட்டின் பேப் 4 பேட்ஸ்மேன்கள் என்று பல முன்னாள் வீரர்கள் பாராட்டுவது வழக்கம்.
மேலும் 68 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள விராட் அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்து இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டனாகவும் வரலாறு படைத்துள்ளார். அந்த சூழலில் தற்போது ஓய்வு பெற்றுள்ள விராட் கோலி குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பேப் 4 பேட்ஸ்மேன்களில் ஜோ ரூட் சிறந்தவர் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜேம்ஸ் ஆண்டரசன் தெரிவித்துள்ளார். ஆனால் பேட்டிங்கில் சச்சினுக்குப்பின் விராட் கோலி சிறந்தவர் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு: “விராட் கோலி நம்ப முடியாதவர். இருப்பினும் ஜோ ரூட் அந்த நால்வரில் மேலே இருப்பார் என்று நான் சொல்வேன். ஏனெனில் அவரிடம் அனைத்து சூழ்நிலைகளிலும் தன்னை உட்படுத்திக் கொண்டு விளையாடும் திறன் இருக்கிறது.
தன்னுடைய டெக்னிக்கில் அனைத்து நேரங்களிலும் மாற்றங்களை செய்த அவர் தன் மீது எறியப்படும் அனைத்துக்கும் தயாராக இருக்கிறார். ஆனால் அந்த 4 பேட்ஸ்மேன்களில் நெருப்பைப் போன்ற மிகவும் கடுமையான போட்டியாளர் என்றால் அது நிச்சயமாக அது விராட் கோலி என்று நினைக்கிறேன். கடந்த காலங்களில் எங்களுக்குள் இருந்த போட்டி நம்ப முடியாதது.
நாங்கள் சந்தித்த போட்டிகள் நம்பமுடியாதவை. களத்தில் நீங்கள் சண்டையிட விரும்பும் ஒரு நபர் அவர். அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார், இதன் மூலம் அவர் ஒரு அற்புதமான வீரர் என்பது தெளிவாகிறது. சிறந்த பேட்ஸ்மேன்களில் சச்சினுக்கு பிறகு விராட் கோலி இருப்பார்” என்று கூறினார்.