மதுரை: வடகாடு மோதல் தொடர்பான சிசிடிவி கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமணஞ்சேரியை சேர்ந்த சண்முகம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “புதுகோட்டை மாவட்டம் வடகாடு மாரியம்மன் கோயிலில் திருவிழாவில் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டனர். பட்டியலின சமூக மக்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாமல் கண்துடைப்பாக 10 பேரை மட்டும் கைது செய்துள்ளனர்.
எனவே, வடகாடு மோதல் தொடர்பாக விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும், வடகாடு மாரியம்மன் கோயிலில் பட்டியல் சமூகத்தினர் வழிபடுவதை உறுதி செய்யவும், மோதல் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோ பதிவுகளைக் கொண்டு அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்யவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமர்வில் இன்று (மே 15) விசாரணைக்கு வந்தது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா, காவல் துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஆகியோர் நேரில் ஆஜராகினார். அரசு தரப்பில், “மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.8.75 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. வீடுகள் சேதம் அடைந்தவர்களுக்கு, கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு கட்டி கொடுக்கப்படும்.
அமைதி பேச்சு வார்த்தைக்குப் பிறகு அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் கோயிலில் வழிபட அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் கோயிலுக்கு அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் யார் அதிகாரம் செலுத்துவது என்பதே பிரச்சினை. தற்போது அந்தப் பிரச்சினை சரி செய்யப்பட்டுள்ளது. போதிய காவல் துறை பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. மோதல் தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது,” எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், “மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வருவாய்த் துறையினர் வொயிட் காலர் வேலைதான் செய்கிறார்கள். கலவரம் நடந்த அன்று, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் ஏன் ஆய்வு நடத்தவில்லை? மே 4 முதல் 7-ம் தேதி வரை கோயில் மற்றும் பிரச்சினை நடந்த இடத்தின் சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்: எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.