அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு பூஜ்ய வரி பற்றி இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

புதுடெல்லி: அமெரிக்க பொருட்கள் மீதான வரிகளை பூஜ்யமாக குறைக்க இந்தியா முன்வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறிய நிலையில், அதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக தோஹாவுக்கு சென்றுள்ள ட்ரம்ப் அங்குள்ள தொழிலதிபர்கள் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றார். அப்போது முதலாவதாக ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் ஆலையை தோஹாவில் அமைப்பது குறித்து அதிகாரிகள் மட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதன் பிறகு ட்ரம்ப் கூறுகையில், “இந்தியாவில் பொருட்களை விற்பனை செய்வது மிகவும் கடினமாக இருந்தது. எனவே, அவர்கள் எங்களிடம் எந்த வரியும் வசூலிக்க தயாராக இல்லாத ஒரு ஒப்பந்தத்தை அமெரிக்காவிடம் வழங்கியுள்ளனர்” என்றார்.

அமெரிக்க அதிபர் இவ்வாறு கூறிய சில மணி நேரங்களில் இந்தியா சார்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று கூறுகையில், “இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது மிகவும் சிக்கலான பேச்சுவார்த்தை. எனவே அதுகுறித்து இறுதி முடிவு எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. எந்தவொரு வர்த்தக ஒப்பந்தமும் பரஸ்பரம் பயனளிக்க வேண்டும். அதற்கான பணிகளில்தான் இருநாடுகளும் ஈடுபட்டுள்ளன” என்றார்.

இதனிடையே காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “அமெரி்க்க அதிபர் பூஜ்ய வரி விதிப்பை இந்தியா ஏற்றுக் கொண்டதாக அறிவிக்கிறார். நமது பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் மவுனம் காக்கிறார். இதற்கும், சிந்தூர் ஆபரேஷன் நிறுத்தத்துக்கும் என்ன தொடர்பு?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

அமெரிக்காவின் நெருங்கிய வர்த்தக கூட்டாளியாக இந்தியா உள்ளது. மேலும், அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பிலும் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் சீனாவின் விரிவாக்கத்துக்கான எதிர்சமநிலையாகவும் இந்தியா உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.