‘இண்டியா கூட்டணியின் எதிர்காலம் பிரகாசமாக இல்லை’ – ப.சிதம்பரம் கவலை

புதுடெல்லி: “இண்டியா கூட்டணியின் ஒற்றுமை அப்படியே இருக்கிறதா என்பது குறித்து எனக்கு நிச்சயமாக தெரியவில்லை. ஆனால், அதன் எதிர்காலம் பிரகாசமாக இல்லை.” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சல்மான் குர்ஷித் மற்றும் மிருதுஞ்சய் சிங் ஆகியோர் எழுதிய ‘கன்டெஸ்டிங் டெமாக்ரட்டிக் டெஃபிசிட்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் வியாழக்கிழமை கலந்து கொண்டு பேசிய ப.சிதம்பரம் கூறியதாவது: மிருதுஞ்சய் சிங் சொன்னது போல (இண்டியா கூட்டணி) எதிர்காலம் பிரகாசமாக இல்லை. அந்தக் கூட்டணி இன்னும் அப்படியே இருக்கிறது என அவர் நினைப்பதாகத் தோன்றுகிறது. எனக்கு நிச்சயமாக தெரியவில்லை. இதற்கு சல்மான் குர்ஷித் தான் பதில் சொல்ல வேண்டும். ஏனெனில், இண்டியா கூட்டணிக்கான பேச்சுவார்த்தை குழுவில் அவரும் இடம்பெற்றிருந்தார். கூட்டணி இன்னும் நிலைத்திருந்தால் நான் மகிழ்ச்சியடைவேன்.

இண்டியா கூட்டணியை இப்போதும் ஒருங்கிணைக்க முடியும். அதற்கான நேரம் இன்னமும் இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி வலிமையான இயந்திரத்தை எதிர்த்துப் போராடுகிறது, அதனை எல்லா முனைகளில் இருந்தும் எதிர்த்துப் போராடவேண்டும்.

எனது அனுபவத்தில், பாஜக மற்றுமொரு அரசியல் கட்சி இல்லை. அது ஒரு இயந்திரத்துக்கு பின்னால் நிற்கும் இன்னுமொரு இயந்திரம். இரண்டு இயந்திரங்களும் சேர்ந்து இந்தியாவிலுள்ள எல்லா இயந்திரங்களையும் கட்டுப்படுத்துகின்றன.

தேர்தல் ஆணையம் முதல் நாட்டிலுள்ள சிறிய காவல்நிலையம் வரை அவர்களால் (பாஜக) அனைத்தையும் கட்டுப்படுத்த முடிகிறது, சிலநேரம் கைப்பற்றவும் முடிகிறது. இந்தியாவின் தேர்தல்களை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது என்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. ஏனெனில் அது இன்னும் தேர்தல் ஜனநாயகமாகவே இருக்கிறது.

இந்தியாவில் தேர்தல்களில் நீங்கள் தலையிட முடியும். அவற்றை நீங்கள் சரி செய்யலாம். ஆனால் நீங்கள் தேர்தல்களில் இருந்து தப்பிக்க முடியாது. தேர்தல்களில் ஆளுங்கட்சி 98 சதவீதம் பெற்று வெற்றி பெற செய்யமுடியாது. அது இந்தியாவில் சாத்தியமில்லை. 2029 மக்களவைத் தேர்தல் முக்கியமானது, அது நம்மை ஒரு முழுமையான ஜனநாயகத்துக்கு திரும்பச் செய்யவேண்டும். இவ்வாறு முன்னாள் நிதியமைச்சர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.