இஸ்லாமாபாத்: அமைதிக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கம்ரா விமானப்படை தளத்திற்கு வருகை தந்த அவர், இந்தியாவுடனான சமீபத்திய ராணுவ மோதலில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் மத்தியில் பேசிய ஷெபாஸ் ஷெரீப், “அமைதிக்காக நாங்கள் (இந்தியாவுடன்) பேசத் தயாராக இருக்கிறோம். அமைதிக்கான நிபந்தனைகளில் காஷ்மீர் பிரச்சினையும் அடங்கும்” என்று கூறினார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) பேசிய வெளியுறவு அமைச்சர் இஷாக் தர், “அனைத்து சர்ச்சைக்குரிய விஷயங்களையும் முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான், இந்தியாவுடன் ஒருங்கிணைந்த உரையாடலை மேற்கொள்ள விரும்புகிறது. போர் நிறுத்தம் இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே நடந்த தொடர்பு மூலம் நீட்டிக்கப்பட்டது. ஆனால், இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு அரசியல் உரையாடல் நடக்க வேண்டும். ஒரு கூட்டு உரையாடலை நடத்துவோம் என்று நாங்கள் உலகிற்கு கூறியுள்ளோம்.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக திருத்தவோ அல்லது முடிவுக்குக் கொண்டுவரவோ முடியாது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை வலுவிழக்கச் செய்ய பஹல்காம் சம்பவத்தை இந்தியா ஒரு காரணமாக பயன்படுத்தி உள்ளது.
இந்தியாவுடன் பதற்றங்கள் அதிகரித்தபோது உலகத் தலைவர்களுடனான உரையாடல்களில் பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை கோரவில்லை. கண்ணியத்துடனும் மரியாதையுடனும் அமைதியை விரும்புவதாக பாகிஸ்தானின் நிலைப்பாடு அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் தாக்குதலைத் தொடங்க மாட்டோம் என்று எங்கள் நண்பர்களிடம் கூறினோம், அதேநேரத்தில், தூண்டப்பட்டால் நிச்சயமாக பதிலடி கொடுப்போம் என்று கூறி இருந்தோம். பாகிஸ்தானின் பதில் அளவிடப்பட்டது, தீர்க்கமானது மற்றும் சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டு இருந்தது” என தெரிவித்தார்.