உமர் அப்துல்லா Vs மெகபூபா முப்தி: சிந்து நதிநீர் ஒப்பந்த விவகாரத்தில் வார்த்தைப் போர்!

ஸ்ரீநகர்: சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்ட பின்பு, துல்புல் திட்டத்தை மீண்டும் தொடங்குவது தொடர்பாக ஜம்மு – காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கும், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்திக்கும் இடையே சமூக வலைதளத்தில் வார்த்தைப் போர் நடந்தது.

பந்திபோரா மாவட்டத்தில் உள்ள ஜீலம் நதியால் நிரம்பிய வுலர் ஏரியை புனரமைக்க முயற்சி செய்யும் துல்புல் திட்டம் கடந்த 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து 2007-ம் ஆண்டு திட்டம் நிறுத்தப்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்கு பின்பு ஏப்.23-ம் தேதி சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, துல்புல் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வியாழக்கிழமை கோரியிருந்தார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து உமர் அப்துல்லா வெளியிட்டிருந்த பதிவில், “வடக்கு காஷ்மீரில் உள்ள வுலர் ஏரி. இந்த வீடியோவில் நீங்கள் பார்ப்பது துல்புல் நேவிகேஷன் தடுப்பணையின் குடிமராமத்து பணி. 1980-களின் ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை காட்டி பாகிஸ்தான் கொடுத்த அழுத்தத்தால் நிறுத்தப்பட்டது.

தற்போது சிந்து நதிநீர் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதால் துல்புல் திட்டத்தை மீண்டும் தொடங்க முடியுமா என்று எனக்கு ஆர்வமாக இருக்கிறது. இது ஜீலம் நதியைக் கட்டுப்படுத்தும் நன்மையை நமக்கு அளிக்கும். அதேபோல், மின் உற்பத்தி திட்டங்களை மேம்படுத்தும் குறிப்பாக குளிர்காலங்களில்” என்று தெரிவித்திருந்தார்.

முதல்வரின் இந்த யோசனையை, பொறுப்பற்ற மற்றும் ஆத்திரமூட்டும் செயல் என்று முன்னாள் முதல்வர் மெகபூப் முப்தி சாடியுள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றத்துக்கு இடையில், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவின் துல்புல் திட்டத்துக்கான அழைப்பு துரதிருஷ்டவசமானது. இரண்டு நாடுகளும் ஒரு முழு போருக்கான விளிம்பு வரை சென்று பின்வாங்கியிருக்கும் நிலையில், ஜம்மு – காஷ்மீர் பல அப்பாவி உயிர்களை இழந்து, அழிவு மற்றும் பெரும் துன்பத்தைச் சந்தித்து வரும் நிலையில், இதுபோன்ற அறிக்கை பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான ஆத்திரமூட்டும் செயலாகும்.

நாட்டிலுள்ள பிற மக்களைப் போலவே காஷ்மீர் மக்களும் அமைதியான வாழ்க்கைக்கு தகுதியானவர்களே. நீர் போன்ற அத்தியாவசியமான, உயிர் காக்கும் ஒன்றை அரசியலாக்குவது மனிதத்தன்மையற்ற செயல். அதேபோல், இரண்டு பேருக்கு இடையிலான விஷயத்தை சர்வதேசமயமாக்கும் ஆபத்தான செயல்” என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து முப்தியின் கருத்துக்கு பதில் கொடுத்து உமர் அப்துல்லா பதிவிட்டுள்ளார். அதில் அவர், “உண்மையில் துரதிருஷ்டவசமானது என்னவென்றால், மலிவான விளம்பரத்துக்காகவும், எல்லைத் தாண்டி இருக்கும் யாரோ ஒருவரை திருப்திப்படுத்த நீங்கள் மேற்கொள்ளும் குருட்டுத்தனமான ஆசையால், ஜம்மு – காஷ்மீர் மக்களின் நலனுக்கு எதிரான வரலாற்று துரோகம் சிந்து நதிநீர் ஒப்பந்தம் என்பதை ஏற்க மறுப்பதே! இந்த ஒப்பந்ததை நான் எப்போதும் எதிர்த்து வந்துள்ளேன். இனிமேலும் எதிர்ப்பேன்.

அநீதியான ஒப்பந்தத்தை எதிர்ப்பது என்பது எந்த வகையிலும், வடிவத்திலும் போர் வெறியாகாது. இது ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கு நமது நீரை நமக்காக பயன்படுத்திக்கொள்ளும் உரிமை மறுக்கப்பட்ட அநீதியை சரி செய்வது பற்றியது” என்று விமர்சித்துள்ளார்.

உமரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள முப்தி, “யார் யாரை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்பதை காலம் வெளிப்படுத்தும். என்றாலும் உங்களின் மதிப்புக்குரிய தாத்தா அதிகாரத்தை இழந்த பின்பு இரண்டு தசாப்தங்களாக பாகிஸ்தானுடன் இணைவது குறித்து வாதிட்டார். ஆனால், மீண்டும் முதல்வர் பதவிக்கு வந்ததும், இந்தியாவுடன் நிற்பது என்று தனது நிலைப்பாட்டை மாற்றினார் என்பதை நினைவுகூர்வது சரியாக இருக்கும்.

மாறாக மக்கள் ஜனநாயக கட்சி அதன் கொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகளில் தொடர்ந்து நீடித்து நிற்கிறது. உங்கள் கட்சியைப் போல அரசியல் தேவைக்கு ஏற்ப நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. எங்களின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்த பதற்றத்தைத் தூண்டும், போர் வெறி கொண்ட வார்த்தைகளை பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை. எங்களின் செயல்கள் அதனை வெளிப்படுத்தும்” என்று சாடியுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, “காஷ்மீரின் மிகப் பெரியத் தலைவர் என நீங்கள் அழைத்த ஒருவரைப் பற்றி மோசமாக சித்தரிப்பது தான் நீங்கள் செய்யக் கூடிய செயலா? நீங்கள் எடுத்துச்செல்ல விரும்பும் இந்த சாக்கடை உரையாடலைக் கடந்து, மறைந்த முப்தி சாகேப்பை விலக்கி வைக்கிறேன். நீங்கள் விரும்பும் யாருக்காகவும் நீங்கள் தொடர்ந்து வாதிடலாம். நான் ஜம்மு காஷ்மீர் மக்களுக்காகவும், நமது நதிகளை நமக்காக பயன்படுத்துவது குறித்தும் வாதிடுவேன்.

நான் நதி நீரை நிறுத்தப்போவதில்லை. நமக்காக அதிகம் பயன்படுத்தவே விரும்புகிறேன். நான் இப்போது சில வேலைகளை செய்யலாம் என நினைக்கிறேன். நீங்கள் தொடர்ந்து பதிவிடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 1960, செப்டம்பர் 19-ம் தேதி கையெழுத்தான சிந்து நதிநீர் ஒப்பந்தம் என்பது, எல்லைதாண்டி பாயும் நதிகளின் நீரை இந்தியா – பாகிஸ்தான் இடையே ஒத்துழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றம் வழங்குவதற்கு வழிவகை செய்கிறது. குறிப்பிட்ட அளவுகோளுக்கு உட்பட்டு மேற்கு நதிகளில் நதித்திட்டங்களின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் உரிமை இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேற்கு நதிகளில் இந்தியாவின் நீர்திட்டங்களின் வடிவமைப்பில் ஆட்சேபனை தெரிவிக்கும் உரிமை பாகிஸ்தானுக்கு உண்டு என்பது கவனிக்கத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.