ராய்பூர்: சத்தீஸ்கரிஸ் நக்சல்களின் பாதிப்புக்குள்ளான மன்பூர்- மொஹ்லா- அம்பாகர் – சவுகி மாவட்டத்தில் எளிதில் செல்லமுடியாத மலைகள் மற்றும் அடர்ந்த காடுகளில் இருக்கும் 17 கிராமங்களுக்கு முதல் முறையாக மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கியமந்திரி மஜ்ரதோலா விக்யுதிகரன் யோஜனா-வின் கீழ், ரூ.3 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த மின்சார வசதிகள் மூலமாக 540 குடும்பங்கள் பயன்பெற உள்ளன. கடினமான நிலப்பரப்பு, நக்சல் பாதிப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், இந்தப் பகுதிகளுக்கு மின்சாரம் கொண்டு செல்வது பெரும் சவால் நிறைந்த பணியாகவே இருந்தது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியது: “இந்த கிராமங்களில் சூரியசக்தி பேனல்கள் மூலம் மின்சாரம் கிடைத்து வந்தது. ஆனால், அதில் பேனல் பராமரிப்பு பணி அதிகம் இருந்தன. பல கிராமங்களில் சூரிய சக்தி பேனல்கள் திருடப்பட்டன. இதனால் குழந்தைகள் மண்ணெண்ணெய் விளக்கொளியில் படிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இப்போது மின்சார வசதி கிடைத்ததை கிராம மக்கள் கொண்டாடி வரவேற்றனர்.
பல ஆண்டுகளாக காத்திருந்த வசதி கிடைத்து விட்ட பல கிராமங்களில் குழந்தைகள் நடனமாடியும், பெரியவர்கள் பட்டாசு வெடித்தும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 17 கிராமங்களில் உள்ள 540 குடும்பங்களில் 275 குடும்பங்களுக்கு மின்சார வசதி கொடுக்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள குடும்பங்களுக்கு மின்சார வசதி செய்துகொடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
கடினமான பகுதிகள் உட்பட எல்லா பகுதிகளுக்கும் அடிப்படை வசதிகளை கொண்டு செல்வதே அரசின் முதன்மையான நோக்கம். அப்பகுதிகளில் உள்ள மற்ற கிராமங்களுக்கும் விரைவில் மின்சாரம் வழங்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்பூரில் இருந்து 150 கி.மீ. தள்ளியிருக்கும் மன்பூர்- மொஹ்லா- அம்பாகர் – சவுகி மாவட்டம், நக்சல்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் பஸ்தர் மற்றும் மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.