இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தினேன். ஆனால் அதற்கான பெயரும் புகழும் கிடைக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பாக்ஸ் தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறேன். அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இடையே பொருளாதார உறவை வலுப்படுத்தி உள்ளேன். என்னைப் பொறுத்தவரை வர்த்தகத்தை ஆயுதமாக பயன்படுத்தி அமைதியை நிலைநாட்டி வருகிறேன்.
அண்மையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மிகப்பெரிய போர் வெடித்தது. இரு நாடுகள் இடையே அணு ஆயுத போர் மூளும் அபாயம் எழுந்தது. உடனடியாக இரு நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவின் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். வர்த்தகத்தை ஆயுதமாக பயன்படுத்தி இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தினேன். ஆனால் அதற்கான அங்கீகாரம் எனக்கு கிடைக்கவில்லை, பெயரும், புகழும் கிடைக்கவில்லை.
ரஷ்யா, உக்ரைன் போர்: ரஷ்யா, உக்ரைன் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெறுகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த போரால் சோர்வடைந்துவிட்டார். வர்த்தகத்தை ஆயுதமாக பயன்படுத்தி ரஷ்யா, உக்ரைன் இடையே அமைதியை ஏற்படுத்த முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்.
அமெரிக்கா, ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதிலும் வர்த்தகத்தை முன்னிறுத்தி நல்ல தீர்வை எட்ட முயற்சி செய்வேன். ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது என்பதில் அமெரிக்கா மிகவும் உறுதியாக இருக்கிறது. சிரியாவில் ஆட்சி நடத்தும் புதிய அரசு மாற்றத்தை விரும்புகிறது. இதன்காரணமாக அந்த நாட்டின் மீதான தடைகளை நீக்கி உள்ளேன்.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது இருமுறை என்னை கொலை செய்ய முயற்சிகள் நடைபெற்றன. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் முக்கிய தகவல்கள், ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை இப்போதைக்கு பகிரங்கமாக வெளியிட முடியாது. இவ்வாறு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்