India Next Test Captain: ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட உள்ளது. இச்சூழலில் இத்தொடருக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி ஓய்வை அறிவித்துள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக விராட் கோலி இன்னும் 2 முதல் 3 ஆண்டுகள் வரை விளையாடுவார் என எதிர்பார்த்தநிலையில், அவர் ஓய்வை அறிவித்தது ரசிகர்கள் இடையே கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதேசமயம் இந்த இரண்டு வீரர்களின் இடத்தை நிரப்ப போவது யார் என்ற கேள்வி எழுந்ததோடு, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் யார் என்ற கேள்வியும் எழும்பி உள்ளது. இந்த நிலையில் தான், முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் குறித்து பேசி இருக்கிறார். “நீங்கள் இந்திய கேப்டன் பதவிக்கு யாரையேனும் தயார்படுத்த விரும்பினால், அதற்கு சும்பன் கில் சரியான வீரர் என நான் கூறுவேன்.
அவருக்கு ஒரு வாய்ப்பை கொடுக்கலாம். தற்போது அவருக்கு 25, 26 வயது தான் ஆகிறது. அதனால் அவருக்கு தேவையான நேரம் உள்ளது. மேலும், அவருடன் ரிஷப் பண்டும் உள்ளார். அவர்கள் இருவருக்குமே கேப்டன் அனுபவம் உள்ளது. இப்போது அவர்கள் ஐபிஎல் அணிக்கு கேப்டனாக இருப்பது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. சுப்மன் கில்லின் அனுபவம் மிகவும் சுவாரஸ்யமானது. அதேசமயம் அவர் மிகவும் அமைதியானவர். ஆனால் அவர் வெளிநாடுகளில் ரன்களை சேர்க்கவில்லை என கூறுவது எனக்கு தெரியும். ஒவ்வொரு முறையும் இந்த விமர்சனம் எழுந்து வருகிறது.
சில சமயங்களில் நானே அவர்களிடம் கேட்பேன், நீங்கள் வெளிநாடுகளில் எவ்வளவு ரன்கள் குவித்தீர்கள் என்று. அதனால் வெளிநாடு வெளிநாடு என கூறாமல், அவரை விளையாட அனுமதிக்க வேண்டும். மேலும், இந்த சுற்றுப்பயணங்களில் ஒன்றில் அவர் சிறப்பாக செயல்படுவார் என நான் உறுதியாக நம்புகிறேன்” என ரவி சாஸ்திரி கூறினார்.
மேலும் படிங்க: ருதுராஜ் தேவையில்லாத ஆணி! இந்திய A அணியில் கழட்டிவிடப்பட்ட ‘இந்த’ 2 வீரர்கள்!
மேலும் படிங்க: IPL 2025 : ஆர்சிபி, விராட் கோலிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் காத்திருக்கும் சர்பிரைஸ்