மதுரை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கின்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பி.நீதிபதியின் உசிலம்பட்டியில் உள்ள வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை செய்தனர். சுமார் 10 மணிநேரம் நடந்த சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றவில்லை என முன்னாள் எம்எல்ஏ-வின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டப்பேரவை தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பி.நீதிபதி. இவர் 2016 முதல் 2021 வரை உசிலம்பட்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். அக்காலகட்டத்தில் வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக உசிலம்பட்டி சந்தைப்பட்டியைச் சேர்ந்த ஆர்.கண்ணன் புகார் அளித்தும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதியவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அம்மனுவில், ‘கடந்த 2016 ம் ஆண்டு முதல் 2021 வரை உசிலம்பட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ-வாக பி.நீதிபதி பதவி வகித்தார். இவர் வருமானத்துக்கு அதிகமாக மனைவி ஆனந்தி, மகள் ஜெயதேவி, மகன் இளஞ்செழியன் ஆகியோர் பெயரில் சொத்துக்களை சேர்த்துள்ளதாக தகவலறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் ஆதாரங்களுடன் புகார் அளித்தும் பி.நீதிபதி, அவரது குடும்பத்தினர் மீது போலீஸார் சொத்து குவிப்பு வழக்குப் பதியவில்லை. எனவே நான் அளித்துள்ள மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார். கடந்த மார்ச் மாதம் 27-ம் தேதி இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கோபிநாத் ஆஜராகி, உசிலம்பட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ நீதிபதிக்கு எதிரான புகார் மீது முதல்கட்ட விசாரணை முடிந்துள்ளது. தற்போது வழக்கு பதிய ஊழல் கண்காணிப்பு பிரிவு இயக்குநர் அனுமதித்துள்ளார். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வாரத்துக்குள் சொத்து குவிப்பு வழக்கு பதியப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அதிமுக எம்எல்ஏ பி.நீதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அதனைத்தொடர்ந்து இன்று உசிலம்பட்டி அண்ணா நகரிலுள்ள முன்னாள் எம்எல்ஏ பி.நீதிபதியின் வீட்டில் டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில் போலீஸார் சோதனை நடத்தினர்.
அவரது வீட்டில் அதிகாலை 6 மணி முதல் மாலை 4 மணிவரை சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடந்தது. இதில் ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என முன்னாள் எம்எல்ஏவின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். சோதனை தகவலறிந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிமுக நிர்வாகிகளுடன் நேரில் வந்து சோதனை முடியும் வரை உடனிருந்தார்.