புதுடெல்லி: எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான் குறித்து, உலக நாடுகளின் தலைவர்களிடம் ஆதாரத்துடன் விளக்கும் விதமாக ரவிசங்கர் பிரசாத், சசிதரூர், கனிமொழி உட்பட 7 பேர் தலைமையில் எம்.பி.க்கள் குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழுவினர் பிரிட்டன், வளைகுடா நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளுக்கும் 10 நாட்கள் பயணம் மேற்கொண்டு, இந்தியாவின் நிலை குறித்து விளக்க உள்ளனர்.
காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் கடந்த மாதம் 22-ம் தேதி நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இதில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு நேரடி தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள எல்லை பகுதிகளை குறிவைத்து ட்ரோன்கள், ஏவுகணைகளை பாகிஸ்தான் வீசியது. இந்திய படைகள் தனது அதிநவீன ஆயுதங்களின் உதவியுடன் அவை அனைத்தையும் நடுவானிலேயே தகர்த்து அழித்தது. இந்த மோதல் ஒருசில நாட்கள் நீடித்த நிலையில், பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஏற்று கடந்த 10-ம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
எனினும், பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தீவிரவாதிகளுக்கு தஞ்சம் அளிப்பது, நிதிஉதவி வழங்குவது, எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு உதவி செய்வது என தொடர்ந்து பல ஆண்டுகளாகவே தீவிரவாதத் துக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்பட்டு வருவது குறித்து உலக நாடுகளிடம் ஆதாரங்களுடன் விளக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, அனைத்து கட்சி எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்களை உலகின் பல நாடுகளுக்கும் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. ரவிசங்கர் பிரசாத், வைஜெ யந்த் பாண்டா (பாஜக), சசி தரூர் (காங்கிரஸ்), கனிமொழி (திமுக), சஞ்சய் குமார் ஜா (ஐஜத), சுப்ரியா சுலே (என்சிபி – சரத்பவார்), ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா) ஆகிய 7 எம்.பி.க்களும் அந்த குழுக்களுக்கு தலைமை வகிப்பார்கள். ஒவ்வொரு குழுவிலும் பாஜக, காங்கிரஸ், திமுக, திரிணமூல், ஐஜத, என்சிபி (சரத் பவார்), பிஜு ஜனதா தளம், சிவசேனா (உத்தவ்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை சேர்ந்த 5 முதல் 8 எம்.பி.க்கள் இடம்பெறுவார்கள். வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரும் இக்குழுவில் இடம்பெறுவார். இந்த குழுக்களின் ஒருங்கிணைப்பாளராக நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இருப்பார்.
இந்த குழுவினர் பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், தென் ஆப்பிரிக்கா உட்பட பல்வேறு நாடுகளுக்கு 10 நாட்கள் பயணம் மேற்கொள்வார்கள். இந்த பயணம் வரும் 23-ம் தேதி தொடங்குகிறது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று தெரிவித்தார். இந்த பயணத்தின்போது, பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு செயல்பாடுகள், பஹல்காம் தாக்குதலின் பின்னணி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் பொய் பிரச்சாரங்கள் ஆகியவை குறித்து உலக நாடுகளின் தலைவர்களிடம் எம்.பி.க்கள் ஆதாரங்களுடன் எடுத்துரைப்பார்கள்.
இந்தியாவுக்கு எதிராக இதுவரை நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களில் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பு, இதில் அந்த நாட்டின் ராணுவம், உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆகியவை எவ்வாறு பின்னி பிணைந்துள்ளன என்பதற்கான முழு ஆதாரங்களை வெளியுறவு துறை, நாடாளுமன்ற விவகார துறை, உள்துறை அமைச்சகங்கள் இணைந்து ஆவணங்களாக தயாரித்து வருகின்றன. எம்.பி.க்கள் குழுவினரிடம் இந்த ஆவணங்கள் வழங்கப்பட உள்ளன. அவற்றின் மூலம் உலக நாடுகளின் தலைவர்களுக்கு இந்திய எம்.பி.க்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.