டெல்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் 15 பேர் ராஜினாமா – புதிய கட்சியை தொடங்கினர்!

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சிக்கு அடுத்த பெரும் அதிர்ச்சியாக, டெல்லியில் மாநகராட்சியின் 15 கவுன்சிலர்கள் கட்சியிலிருந்து ராஜினாமா செய்து, இந்திரபிரஸ்த விகாஸ் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளனர்.

புதிதாக உருவாக்கப்பட்ட இந்திரபிரஸ்த விகாஸ் கட்சிக்கு ஹேம்சந்த் கோயல் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகேஷ் கோயல், ஹிமானி ஜெயின், தேவிந்திர குமார், ராஜேஷ் குமார் லாடி, சுமன் அனில் ராணா, தினேஷ் பரத்வாஜ், ருணாக்‌ஷி சர்மா, மனிஷா, சாஹிப் குமார், ராக்கி யாதவ், உஷா சர்மா மற்றும் அசோக் பாண்டே போன்ற முக்கிய ஆம் ஆத்மி தலைவர்களும் இக்கட்சியில் இணைந்துள்ளனர். தற்போது முகேஷ் கோயலின் விலகல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், அவர் டெல்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மி கட்சியின் அவைத் தலைவராகப் பணியாற்றினார்.

“கடந்த ஓரிரு வருடங்களாக எந்த பொதுப் பணிகளையும் செய்ய முடியாததால் இந்திரபிரஸ்த விகாஸ் கட்சியைத் தொடங்கியுள்ளோம். இடையூறுகள் காரணமாக சபை ஒருபோதும் சுமுகமாக இயங்காத நிலை உள்ளது. மேலும், பல கவுன்சிலர்கள் எங்கள் புதிய கட்சியில் சேரக்கூடும்” என்று கோயல் கூறினார். இந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் கோயல் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம் ஆத்மியிலிருந்து விலகிய கவுன்சிலர்கள் சமர்ப்பித்த கூட்டு ராஜினாமா கடிதத்தில், “நாங்கள் அனைவரும் 2022-ஆம் ஆண்டில் டெல்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டோம், ஆனால் 2022-இல் டெல்லி மாநகராட்சியில் ஆட்சிக்கு வந்த போதிலும், கட்சியின் உயர் தலைமையால் டெல்லி மாநகராட்சியை சுமுகமாக நடத்த முடியவில்லை.

உயர்மட்டத் தலைமைக்கும் நகராட்சி கவுன்சிலர்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மிகக் குறைவு. இதன் காரணமாக கட்சி எதிர்க்கட்சி வரிசைக்கு வந்தது. பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால், கவுன்சிலர்களான நாங்கள் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறோம்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாத தொடக்கத்தில், ஆண்ட்ரூஸ் கஞ்சைச் சேர்ந்த அனிதா பசோயா, ஹரி நகரைச் சேர்ந்த நிகில் சப்ரானா மற்றும் ஆர்கே புரத்தைச் சேர்ந்த தர்மவீர் சிங் ஆகிய மூன்று ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் பாஜகவுக்குத் தாவியதைத் தொடர்ந்து, டெல்லி மாநகராட்சியில் பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதேபோல கடந்த ஆண்டு செப்டம்பரில் மூன்று ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் பாஜகவுக்கு தாவினர்.

இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 25-ஆம் தேதி நடந்த மேயர் தேர்தல் போட்டியிலிருந்து ஆம் ஆத்மி கட்சி விலகியது. பாஜக கவுன்சிலர்களான ராஜா இக்பால் சிங் மற்றும் ஜெய் பகவான் ஆகியோர் டெல்லி மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் காங்கிரஸ் வேட்பாளர்களான மன்தீப் சிங் மற்றும் அரிபா கானை தோற்கடித்தனர். இரண்டு உயர் பதவிகளுக்கும் பதிவான மொத்தம் 142 வாக்குகளில், பாஜகவின் ராஜா இக்பால் சிங் 133 வாக்குகளைப் பெற்றார், அதே நேரத்தில் காங்கிரஸின் மன்தீப் சிங் 8 வாக்குகளைப் பெற்றார். ஒரு வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.