மாநகர பேருந்தில் இருந்து முதியவரை இறக்கிவிட்டு தாக்கிய ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்

சென்னை: மாநகர பேருந்தில் இருந்து இறக்கி முதியவரை தாக்கிய ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை கிளாம்பாக்கம் – கோயம்பேடு இடையே 70-சி வழித்தடத்தில் மாநகர பேருந்து இயக்கப்படுகிறது.

இந்த பேருந்தில் நேற்று காலை முதியவர் ஒருவர் ஏறியுள்ளார். அவரை முதியோர் இருக்கையில் அமரக்கூடாது என நடத்துநர் கூறியதாக தெரிகிறது. இதில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது. மேலும், முதியவரை நடத்துநர் பேருந்தில் இருந்து இறக்கி சரமாரியாக தாக்கினார்.

பேருந்தில் இருந்து இறங்கி வந்த ஓட்டுநரும் முதியவரை தாக்கியுள்ளார். இதை பார்த்த பயணிகள், வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றினர். இந்த காணொலி இணைய தளத்தில் வேகமாக பரவி பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது:

இந்த சம்பவம், வண்டலூர் கேட் அருகே நடைபெற்றுள்ளது. இதில் ஈடுபட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.