தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே தளவாய்ப்பாளையம் வீரையன் நகரில் வசித்து வருபவர் எம்.ரங்கசாமி. அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான இவர் தற்போது அமமுக துணைப் பொதுச் செயலாளராக உள்ளார்.
2011-2017 காலகட்டத்தில் இவர் எம்எல்ஏவாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.49 கோடி சொத்து சேர்த்ததாக ரங்கசாமி, மனைவி ஆர்.இந்திரா, மகன் வினோ பாரத் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், ரங்கசாமி வீட்டில் தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஆர்.அன்பரசன் தலைமையிலான போலீஸார் நேற்று காலை 7 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை சோதனை நடத்தினர்.
ரெங்கசாமி சென்னையில் இருந்ததால், அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி, வங்கிக் கணக்கு புத்தகங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். சொத்து ஆவணங்கள் வங்கியில் இருப்பதாக குடும்ப உறுப்பினர்கள் கூறியதால், அது தொடர்பாக ஆய்வு செய்த பிறகு, கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.