மும்பை: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டினை விளக்குவதற்காக பல்வேறு வெளிநாடுகளுக்குச் செல்ல இருக்கும் பிரதிநிதிகள் குழுவினை மாப்பிள்ளை ஊர்வலத்துடன் ஒப்பிட்டுள்ள சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி. சஞ்சய் ரவுத், இண்டியா கூட்டணி இதனைப் புறக்கணிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், சிவ சேனா (ஷிண்டே பிரிவு) ஸ்ரீகாந்த் ஷிண்டே எதனைப் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்திய இந்தியா – பாகிஸ்தான் மோதலில், இந்தியாவின் நிலைப்பாட்டினை விளக்கவும், பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக குற்றம்சாட்டி பாகிஸ்தான் மீதான அழுத்தத்தை அதிகரிக்கவும் அனைத்துக் கட்சிகளின் எம்.பி.கள் அடங்கிய 7 பிரதிநிதிகள் குழுக்களை முக்கியமான வெளிநாடுகளுக்கு அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்தநிலையில், இந்த பிரதிநிதிகள் குழுக்கள் குறித்து சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி. சஞ்சய் ரவுத் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “இந்த மணமகன் ஊர்வலத்துக்கு அவசியமே இல்லை. பிரதமர் மிகவும் பலவீனமானவர், இந்த அளவுக்கு அவசரம் காட்டவேண்டிய அவசியம் இல்லை.
மகாராஷ்டிராவின் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் (எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே) வெளிநாட்டில் போய் எதனைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்? பாஜக இதனை அரசியலாக்குகிறது. எல்லாவற்றையும் அரசியலாக்குவது அவர்களின் (பாஜக) வழக்கம். இண்டியா கூட்டணி இந்த மணமகன் ஊர்வலத்தை புறக்கணிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
பிரதிநிதிகள் குழுவில் உத்தவ் அணி சிவசேனாவைச் சேர்ந்த பிரியங்கா சதுர்வேதியும் இடம் பெற்றுள்ளார். அவர் பாஜக எம்.பி. ரவி சங்கர் பிரசாத் தலைமையிலான குழுவில் இடம்பெறுகிறார். இந்தக் குழு பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய யூனியன், இத்தாலி மற்றும் டென்மார்க்குக்கு செல்லலாம்.
ஆபரேஷன் சிந்தூரின் பின்னணியில், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளிப்பதற்காக 7 பிரதிநிதிகள் குழுக்களை மத்திய அரசு பல்வேறு வெளிநாடுகளுக்கு அனுப்ப இருக்கிறது. இந்தக் குழுக்களில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் என 51 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த 51 அரசியல் தலைவர்களில் 31 பேர் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்தவர்கள். மற்ற 20 பேர் என்டிஏ அல்லாத கட்சியைச் சேர்ந்தவர்கள். ஏழு பிரதிநிதிகள் குழுக்கள் மற்றும் ராஜதந்திரிகளில் ஒரு முஸ்லிம் பிரதிநிதியும் இடம்பெறுகின்றார்.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்த வரை, சசி தரூர் தவிர, மணீஷ் திவாரி, அமர் சிங் மற்றும் சல்மான் குர்ஷித் பிரதிநிதிகள் குழுக்களில் இடம் பெற்றுள்ளனர். பிரதிநிதிகள் குழுக்களுக்கு காங்கிரஸ் கட்சி பரிந்துரைத்த நான்கு பேரில், ஆனந்த் சர்மா மட்டுமே பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றுள்ளார். சசி தரூரை காங்கிரஸ் கட்சி பரிந்துரைக்காத நிலையில், அரசு தன்னிச்சையாக அவரைத் தேர்வு செய்துள்ளது. இது பெரும் அரசியல் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “இது நரேந்திர மோடி அரசின் முழுமையான நேர்மையின்மையையும், முக்கியமான தேசிய பிரச்சினையில் பாஜகவின் அரசியல் விளையாட்டை வெளிப்படுத்துகிறது.” என்று குற்றம்சாட்டியுள்ளார்.