கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதாகக் கூறி 53 வயது பெண்ணிடம் ரூ.79 லட்சத்தை மோசடி செய்த ஃபேஸ்புக் நண்பரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கோரேகானில் வசித்து வரும் 53 வயதான பெண்ணிடம் ஜூபர் ஷம்ஷாத் கான் என்பவர் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி நண்பரானார். அப்போது அந்த பெண்ணிடம் நெருங்கிப் பழகிய அவர், கிரிப்டோகரன்சி திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக வருவாய் ஈட்டலாம் என்று கூறி வந்துள்ளார்.
இதை நம்பிய அந்த பெண்ணும், ஒரு சிறுதொகையை முதலீடு செய்தார். அந்தத் தொகையின் மூலம் லாபம் கிடைத்ததாகக் கூறி அந்தத் தொகையை ஷம்ஷாத் கான் திருப்பிக் கொடுத்தார். இதனால் அந்த பெண்ணுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.
மேலும், அதிக தொகையை முதலீடு செய்யலாம் என்று ஷம்ஷாத் கூறினார். இதனால் அதிக பணத்துக்கு ஆசைப்பட்ட அந்தப் பெண்ணும் அதிக தொகையை முதலீடு செய்தார். இந்நிலையில் முதலீடு செய்த தொகையிலிருந்து லாபம் வராததால் ஷம்ஷாத் கானை, அந்த பெண் அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார்.
மொத்தமாக ரூ.79 லட்சத்தை முதலீடு செய்துள்ளேன். இதை உடனே திருப்பித் தரவேண்டும் என்று அந்த பெண் கேட்டுள்ளார்.
அதற்கு அந்த ஷம்ஷாத் கான், பணம் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து தான் ஏமாந்ததை உணர்ந்த அந்த பெண், நவி மும்பையில் உளள கார்கர் போலீசில் புகார் அளித்தார்.
இதுகுறித்து கார்கர் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: பாதிக்கப்பட்ட அந்த பெண் அளித்த புகாரில், கடந்த 2020 அக்டோபர் முதல் மார்ச் 2025 வரை பல பரிவர்த்தனைகளில் ரூ.78,82,684 ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார். பணத்தை திருப்பி அளிக்காததால், ஜூபர் ஷம்ஷாத் கான் மீது தற்போது புகார் செய்யப்பட்டுள்ளது.
தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி, மோசடி செய்த ஜூபர் ஷம்ஷாத் கானை தேடி வருகிறோம். விரைவில் அவர் பிடிபடுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.