சென்னை: தலா ரூ.1 லட்சம் மானியத்துடன் 154 மகளிருக்கு ஆட்டோ வழங்கல்

சைதாப்பேட்டை தொகுதியில் தலா ரூ.1 லட்சம் மானியத்துடன் 154 மகளிருக்கு ஆட்டோக்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சி.வெ. கணேசன் ஆகியோர் வழங்கினர்.

சென்னை சைதாப்பேட்டையில் 154 மகளிர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியத்துடன் கூடிய ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சியை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் காரப்பாக்கம் கணபதி, எஸ்.அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர்கள் கிருஷ்ண மூர்த்தி, துரை ராஜ், மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஸ்ரீதரன், தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: மகளிருக்கு வழங்கப்படும் ஆட்டோக்களை 100 சதவீதம் மகளிரே ஓட்டுவது மிகப்பெரிய தலைமை பண்பை பெற்று தரும். மகளிர் உரிமைத் தொகை திட்டம் 1 கோடியே 15 லட்சம் மகளிர் வாழ்வில் மகிழ்ச்சி வெள்ளத்தை ஏற்படுத்தி யுள்ளது. 700 கோடி பயணங்களை மகளிர் விடியல் பயணம் நெருங்கி கொண்டிருக்கிறது, பெண்களுக்காக ஒரு பொருளாதார புரட்சியே தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தொகுதியில் 419 மகளிரும், 200 ஆண்களும் என 619 பேர் ஆட்டோக்களை பெற்று தொழில் முனைவோர்களாக மாறியுள்ளனர்.

இந்த அரசு பொறுப் பேற்ற பிறகு சைதாப்பேட்டை தொகுதியில் கடந்த 2023ம் ஆண்டு மகளிர்களுக்கு ரூ.1 லட்சம் மானியத்துடன் 151 ஆட்டோக்களும், 2024 ஆண்டில் 200 ஆண்களுக்கு ரூ.40,000 சலுகை விலையிலும் ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 8ம் தேதி மகளிர்களுக்கு ரூ.1 லட்சம் மானியத்துடன் கூடிய 75 பிங்க் ஆட்டோக்களை முதல்வர் வழங்கினார்.

கடந்த மார்ச் 3ம் தேதி 39 ஆதி திராவிட பயனாளிகளுக்கு ஆட்டோக்கள் ரூ.1 லட்சம் மானியத்துடன் வழங்கப்பட்டுள்ளது. மகளிரே முடிந்த வரை 100 சதவீதம் நீங்களே ஓட்டக்கூடிய சக்திகளை பெற வேண்டும், அப்போதுதான் உங்களுக்கு மிகப்பெரிய தலைமை பண்பு கிடைக்கும், சமுதாயத்தில் பலதரப்பட்ட மக்களை உங்களால் சந்திக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமைச்சர் சி.வெ.கணேசன் பேசுகையில், “மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 2000ம் ஆண்டு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு என 9 வாரியங்களை உருவாக்கினார். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இவ்வாரியத்தில் பதிவு செய்து பலன் அடைந்து வருகின்றனர். மகளிர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டதத்தில், கடந்த ஆண்டு 1,000 மகளிர்களுக்கு மானியம் அறிவிக்கப்பட்டு, இதுவரை 545 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் தற்போது, சைதாப்பேட்டை தொகுதியில் 154 மகளிர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியத் துடன் கூடிய ஆட்டோ வழங்கப் பட்டுள்ளது. மகளிரை தொழில் முனைவோர் ஆகவும், சுயமாக தொழில் செய்து ஆட்டோ ஓட்டுநராக தன்னம்பிக்கை வளர்க்கும் வகையில் இத்திட்டத்தினை தமிழக முதல்வர் செயல்படுத்தியுள்ளார்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.