துபாயில் குடிநீர் கொடுக்காமல் பாகிஸ்தானியரால் துன்புறுத்தப்பட்ட இந்தியரை உத்தராகண்ட் போலீஸார் மீட்டுள்ளனர்.
உத்தராகண்டைச் சேர்ந்த விஷால் ஒரு முகவர் முகவர் மூலம் வேலைக்காக துபாய் சென்றுள்ளார். அங்கு பாகிஸ்தான் இளைஞர்கள் தங்கியிருந்த அறையில் விஷால் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சூழ்நிலையில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் இளைஞர்கள் விஷாலுக்கு பல நாட்களாக குடிநீர் கூட வழங்காமல் துன்புறுத்தி உள்ளனர். இதனால் அவருடைய உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த விஷால் குடும்பத்தினர் உத்தராகண்ட் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உதம் சிங் நகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிகாந்த் மிஷ்ரா விஷாலை மீட்கும் பணியில் இறங்கினார். விஷாலை வேலைக்காக அனுப்பி வைத்த முகவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் பேரில் விஷாலை பத்திரமாக மீட்டு அழைத்து வந்துள்ளனர். இதையடுத்து, விஷால் குடும்பத்தினர் மிஷ்ராவை சந்தித்து நன்றி தெரிவி்த்தனர்.