நடுவானில் ஏற்பட்ட கோளாறால் பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் ஏவும் முயற்சி தோல்வி: என்ன நடந்தது?

நடுவானில் பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட்டின் பிஎஸ்-3 இயந்திரத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், இஓஎஸ்-09 செயற்கைக் கோளை விண்ணில் நிலைநிறுத்தும் முயற்சி நேற்று தோல்வியில் முடிந்தது. இதுகுறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் கார்டோசாட், ஸ்காட்சாட், ரிசாட் உள்ளிட்ட பல்வேறு செயற்கைக் கோள்கள் தொலைஉணர்வு பயன்பாட்டுக்காக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், புவி கண்காணிப்பு, எல்லை பாதுகாப்பு பணிகளுக்காக இஓஎஸ்-09 (ரிசாட்-1பி) எனும் அதிநவீன ரேடார் செயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்தது. பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக் கோள் மே 18-ம் தேதி (நேற்று) விண்ணில் செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு, 17-ம் தேதி காலை 7.59 மணிக்கு கவுன்ட்-டவுன் தொடங்கியது.

திட்டமிட்டபடி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் நேற்று அதிகாலை 5.59 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. தரையில் இருந்து புறப்பட்ட 4 நிமிடம் 40 விநாடிகளில், ராக்கெட்டின் முதல் 2 நிலைகள் (திட, திரவ எரிபொருள்) எரிந்து பிரிந்தன. அதன்பிறகு, 3-ம் நிலையான பிஎஸ்-3 இயந்திரம் (திட எரிபொருள்) செயல்பாட்டுக்கு வந்தது. பூமியில் இருந்து சுமார் 335 கி.மீ. உயரத்தில் ராக்கெட் சீரான வேகத்தில் பறந்து கொண்டிருந்தபோது, பிஎஸ்-3 இயந்திரத்தில் உள்ள மோட்டார்களில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது.

திட்டமிட்ட இலக்கைவிட்டு திசைமாறிய ராக்கெட், அடுத்த சில நிமிடங்களில் இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்துடன் தகவல் தொடர்பை இழந்தது. இதையடுத்து, திட்டம் தோல்வியில் முடிந்ததாக இஸ்ரோ அறிவித்தது.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறும்போது, ‘‘பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட்டின் முதல் 2 நிலைகள் சிறப்பாகவே செயல்பட்டு பிரிந்தன. ஆனால், 3-ம் நிலையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, திட்டமிட்ட சுற்றுப் பாதையில் செயற்கைக் கோளை நிலைநிறுத்த முடியவில்லை. இதுகுறித்து முழுமையாக ஆய்வு செய்து, பின்னர் தெரிவிக்கப்படும்’’ என்றார்.

பூமியில் இருந்து 534 கி.மீ. உயரம் கொண்ட சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் இஓஎஸ்-09 செயற்கைக் கோள் நிலைநிறுத்தப்பட இருந்தது. இதன்மூலம், எல்லை கண்காணிப்பு, ராணுவ பாதுகாப்பு, விவசாயம், வனம், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளுக்கான தரவுகளை பெறவும் திட்டமிடப்பட்டது. எதிர்பாராத வகையில் திட்டம் தோல்வியடைந்துள்ளது.

32 ஆண்டுகளில் 3-வது தோல்வி: பிஎஸ்எல்வி வகை ராக்கெட்களை இஸ்ரோ கடந்த 1993 முதல் விண்ணில் செலுத்தி வருகிறது. இதுவரை 63 முறை விண்ணில் செலுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 3 முறை மட்டுமே திட்டம் தோல்வியடைந்தது. முதல்முறையாக 1993 செப்டம்பரில் செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி-டி1 ராக்கெட், 2-ம் நிலை பிரிவின்போது வானில் வெடித்து சிதறியது. 24 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2017 ஆகஸ்டில் பிஎஸ்எல்வி ராக்கெட் 2-வது முறையாக தோல்வியை சந்தித்தது. பிஎஸ்எல்வி-சி39 ராக்கெட்டில் இருந்த செயற்கைக் கோளின் வெப்ப கவசம் செயல்படாததால் அந்த திட்டம் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில், சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இஓஎஸ்-09 செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தும் திட்டத்தில் பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் தோல்வியடைந்துள்ளது. இந்தியாவின் நம்பகமான ராக்கெட் என்று கருதப்படும் பிஎஸ்எல்வியின் திட்டத்தில் தோல்வி ஏற்பட்டதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஜனவரியில் ஜிஎஸ்எல்வி-எஃப்15 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட என்விஎஸ்-02 செயற்கைக் கோளில் ஏற்பட்ட பழுதால் அந்த திட்டம் முழு வெற்றி பெறவில்லை. இந்த நிலையில், தற்போது பிஎஸ்எல்வி-சி61 திட்டமும் தோல்வியடைந்துள்ளது. இந்த ஆண்டில் செயல்படுத்திய 2 திட்டங்களும் தோல்வியை சந்தித்தது இஸ்ரோவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.