பாகிஸ்தானின் நுர் கான் விமானப்படை தளம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை அந்நாட்டு பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் ஒப்பு கொண்டுள்ளார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படை கடந்த 7-ம் தேதி நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் அடுத்தடுத்த நாட்களில் இந்தியா மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஆனால் இவற்றை இந்திய பாதுகாப்புப் படையின் வான் தடுப்பு சாதனங்கள் வான் பகுதியிலேயே தாக்கி அழித்தன.
அத்துடன், பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் மீது ஏவுகணைகளை வீசி துல்லிய தாக்குதல் நடத்தியது. இதில், ராவல்பிண்டி நுர் கான், சர்கோதாவின் முஷாப், போலாரி மற்றும் ஜகோபாபாத்தின் ஷபாஸ் ஆகிய விமானப்படை தளங்கள் சேதமடைந்தன. இதை உறுதிப்படுத்தும் வகையில் செயற்கைக்கோள் படங்களும் வெளியாயின.
ஆனால் இந்தியாவின் தாக்குதலால் விமானப்படை தளங்கள் சேதமடைந்ததை பாகிஸ்தான் அரசு உறுதி செய்யவில்லை. பொதுவாக, இந்திய பாதுகாப்புப் படையின் தாக்குதலில் ஏற்படும் சேதத்தை பாகிஸ்தான் ஒப்புக் கொள்வது மிகவும் அரிது.
இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் பேசியதாவது:
ராணுவ தளபதி அசிம் முனிர் கடந்த மே 10-ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, இந்தியாவின் ஏவுகணை தாக்குதலில் ராவல்பிண்டியில் உள்ள நுர் கான் விமானப்படை தளம் உட்பட பல விமானப் படை தளங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்தார். அப்போது அவரின் குரலில் தன்னம்பிக்கையும் தேசபக்தியும் இருந்தது என்பதை கடவுள் மீது சத்தியம் செய்து சொல்கிறேன்.
நாட்டைக் காப்பாற்ற நமது விமானப்படை உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது. அத்துடன் சீனாவின் நவீன சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.