பஞ்சாப் கிங்ஸ் மிரட்டல் வெற்றி… ராஜஸ்தான் படுமோசம் – பிளே ஆப் ரேஸ் எப்படி இருக்கு?

IPL 2025, RR vs PBKS: ஐபிஎல் 2025 தொடர் 10 நாள்கள் இடைவேளைக்கு பின்னர் நேற்று (மே 17) தொடங்கியது. ஆனால், நேற்றைய ஆர்சிபி – கேகேஆர் போட்டி மழையால் டாஸ் கூட போடப்படாமல் ரத்தாகியது. இரண்டு அணிகளுக்கும் தலா 1 புள்ளி கொடுக்கப்பட்டது. 

இதனால், ஆர்சிபி 17 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியது. கேகேஆர் அணி 12 புள்ளிகளுடன் தொடரில் இருந்து வெளியேறியது. இருப்பினும் இன்னும் பிளே ஆப் சுற்றுக்கு எந்தவொரு அணிகளும் இன்னும் தகுதிபெறவில்லை. அந்த வகையில் இன்றைய இரண்டு போட்டிகளும் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றது.

இன்று மாலையில் ராஜஸ்தான் – பஞ்சாப் அணிகள் மோதின. இரவில் டெல்லி – குஜராத் அணிகள் மோதுகின்றன. இதில் ஒருவேளை பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் வென்றால் ஆர்சிபி, குஜராத், பஞ்சாப் அணிகள் மூன்றும் தகுதிபெறும். நான்காவது இடத்திற்கே பலத்த போட்டி நிலவும் எனலாம். அதேபோல், பஞ்சாப் மற்றும் டெல்லி வென்றால் எந்த அணியுமே இன்று தகுதிபெறாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மாலை 3.30 மணிக்கு தொடங்கிய ராஜஸ்தான் – பஞ்சாப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பவர்பிளேவில் பிரியான்ஷ் ஆர்யா, மிட்செல் ஓவன், பிரப்சிம்ரன் சிங் என 3 விக்கெட்டுகள் விழுந்தாலும் ரன்கள் வந்துகொண்டே இருந்தது. பவர்பிளே முடிவில் 58 ரன்களை பஞ்சாப் எடுத்தது. 

ஒரு பக்கம், நேஹல் வதேரா அதிரடியாக விளையாட ஷ்ரேயாஸ் ஐயர் 25 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 30 ரன்களையே அடித்து ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்து வந்த ஷஷாங்க் சிங் நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்தார். வதேரா அரைசதம் கடந்தார். அவர் 37 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர் உடன் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் ஷஷாங்க் சிங் உடன் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் சிறப்பாக விளையாட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்களை அடித்தது.

ஷஷாங்க் சிங் 30 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 59 ரன்களுடனும், ஓமர்ஸாய் 9 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளையும், மஃபாகா, ரியான் பராக், ஆகாஷ் மத்வால் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.  

Match 59. Punjab Kings Won by 10 Run(s) https://t.co/HTpvGew6ef #RRvPBKS #TATAIPL #IPL2025

— IndianPremierLeague (@IPL) May 18, 2025

ராஜஸ்தான் அணி 220 ரன்கள் என்ற இலக்கை மிகவும் துணிச்சலாக தொடங்கியது. முதல் ஓவரிலேயே ஓமர்ஸாய் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய ஜெய்ஸ்வால் 22 ரன்களை அடித்தார். மறுமுனையில் வைபவ் சூர்யவன்ஷியும் அதிரடி காட்ட 2.5 ஓவரில் ராஜஸ்தான் 50 ரன்களை கடந்தது. இந்த ஜோடி 30 பந்துகளில் 76 ரன்களை அடித்தது. பவர்பிளேவில் ஒரு ஓவர் மிச்சம் இருக்கும் சூழலில் சூர்யவன்ஷி 40 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 15 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸரை அடித்திருந்தார்.

பவர்பிளே முடிவில் 1 விக்கெட்டு இழப்பிற்கு ராஜஸ்தான் 89 ரன்களை அடித்திருந்தது. இதுதான் ராஜஸ்தான் அணி பவர்பிளேவில் அடிக்கும் அதிகபட்ச ரன்களாகும். அதன்பின் ராஜஸ்தான் சற்று சுணக்கம் காட்டியது. ஜெய்ஸ்வால் 50, சாம்சன் 20 ரன்களுக்கு ஆட்டமிழக்க பஞ்சாபின் கை ஓங்கியது. ரியான் பராக் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 

துருவ் ஜூரேல் ஒருபக்கம் நம்பிக்கை அளித்தாலும் ஹெட்மயர் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 12 பந்துகளில் 11 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், மூன்றாவது பந்தில் ஜூரேல் ஆட்டமிழக்க பஞ்சாப் அதன் வெற்றியை உறுதிசெய்துவிட்டது. 

இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை 99% உறுதி செய்துவிட்டது. பஞ்சாப் கிங்ஸ் அணியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்பிரீத் பிரார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

பஞ்சாப் கிங்ஸ் வெற்றிபெற்றுள்ள நிலையில், தற்போது நடைபெற்று வரும் டெல்லி – குஜராத் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் உள்ளது. குஜராத் வென்றால் ஆர்சிபி, குஜராஜ், பஞ்சாப் என 3 அணிகளும் இன்றே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும். டெல்லி வென்றால் யாரும் இன்று தகுதிபெற மாட்டார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.