புதுடெல்லி: “முக்கியமான தேசிய பிரச்சினையில் மத்திய பாஜக அரசு, நேர்மையின்மை மற்றும் மலிவான அரசியல் விளையாட்டை விளையாடுகிறது.” என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மே 16-ம் தேதி காலையில் மோடி அரசு, பாகிஸ்தான் பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட இருக்கும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு காங்கிரஸ் சார்பில் 4 உறுப்பினர்கள் அல்லது தலைவர்கள் பெயர்களை தெரிவிக்கும் படி கேட்டிருந்தது. அன்று மாலையே நான்கு உறுப்பினர்களின் பெயர்களும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மூலமாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 17-ம் தேதி பின்னிரவில் பிரதிநிதிகளின் குழுவில் இடம்பெறும் முழு உறுப்பினர்களின் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. மிகவும் துரதிருஷ்டவசமாக, காங்கிரஸ் பரிந்துரைத்த நான்கு பேரில் ஒருவர் மட்டுமே பிரதிநிதிகளின் குழுக்களில் இடம்பெற்றுள்ளார். இது மோடி அரசின் முழுமையான நேர்மையின்மையினை நிரூபிக்கிறது. மேலும், முக்கியத்துவம் வாய்ந்த தேசிய பிரச்சினைகளில் பாஜக ஆடும் மலிவான அரசியல் விளையாட்டைக் காட்டுகிறது. பிரதமர் மற்றும் பாஜகவின் பரிதாபகரமான இந்த விளையாட்டால் காங்கிரஸ் கட்சி குறுகிவிடாது.
காங்கிரஸ் கட்சி எப்போதும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சிறந்த மரபுகளை நிலைநிறுத்தும். தேசத்தின் பாதுகாப்பு விஷயத்தில் பாஜகவினைப் போல மலிவான அரசியலை ஒருபோதும் செய்யாது. அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுக்கும் காங்கிரஸ் கட்சியின் வாழ்த்துகள்.
பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட வேண்டும், பிப்.22, 1994-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை காங்கிரஸ் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது. இந்தப் பிரதிநிதிகள் குழு விஷயம் அதை திசைத்திருப்பி விடக்கூடாது. இவ்வாறு தெரிவித்துள்ளது.
முன்னதாக காங்கிரஸ் ஊடகப்பிரிவு பொதுச்செயலாளரும் மாநிலங்களவை எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “ஆபரேஷன் சிந்தூர் அரசியலாக்கப்படுகிறது என்பது எங்களுக்கு தெரியும். மற்ற எல்லாவற்றையும் விட தேச நலனே முக்கியம் என்று காங்கிரஸ் கட்சி நம்புகிறது.
அரசால் சேர்க்கப்பட்டுள்ள நான்கு பேரும் மூத்த எம்பிக்கள். அவர்களில் ஒருவர் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர், அனுபவம் வாய்ந்தவர் அதில் சந்தேகமில்லை. அவருக்கு வெளியுறவுக்கொள்கை நன்றாக தெரியும். அவர் அவரின் மனசாட்சியை கேட்க வேண்டும். எங்கள் கட்சி சார்பாக நான்கு பேர் பெயர்கள் கேட்கப்பட்டது, அதனை நாங்கள் கொடுத்தோம். அதில் அரசியல் செய்வது முறையாக இருக்காது.” என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.