Virat Kohli Retirement : இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி வெறும் 36 வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்திருக்கிறார். கடந்த ஆண்டு, விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், இப்போது டெஸ்டிலும் ஓய்வு என அவர் அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. எதற்காக அவர் இந்த முடிவை எடுத்தார் என ரசிகர்கள் இன்னும் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். இந்தசமயத்தில் இருக்கும் ஒரே ஒரு ஆறுதல் தரும் விஷயம் என்னவென்றால் இன்னும் ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி இந்திய அணிக்காக விளையாடுவார். இந்த சூழலில் விராட் கோலிக்கு மத்திய அரசு பாரத் ரத்னா விருது கொடுக்க வேண்டும் என சிஎஸ்கே முன்னாள் பிளேயர் கூறியுள்ளார். விராட் கோலியும் அந்த விருதுக்கு தகுதியானவர் தான். ஏனென்றால், விராட் கோலி இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 27599 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 82 சதங்கள் மற்றும் 143 அரைசதங்கள் அடங்கும்.
விராட் கோலிக்கு பாரத ரத்னா
இந்திய விளையாட்டு வரலாற்றில் இதுவரை ஒரே ஒரு வீரருக்கு மட்டுமே பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது, அவர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். 2014 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்த மதிப்புமிக்க சிவிலியன் விருதை இதற்கு முன்பும் பின்பும் எந்த விளையாட்டு வீரரும் பெற்றதில்லை. இருப்பினும், இந்திய கிரிக்கெட்டுக்கு விராட் கோலி அளித்த மகத்தான பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தற்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
சுரேஷ் ரெய்னா என்ன சொன்னார்?
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியின்போது சுரேஷ் ரெய்னா கூறுகையில், ‘விராட் கோலி இந்தியாவிற்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் செய்த அனைத்து சாதனைகளுக்கும், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும். மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி திடீரென ஓய்வு பெற்றது உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே ஷாக்கை கொடுத்திருக்கிறது. 36 வயதான விராட் கோலி இந்தியாவுக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார், அதில் அவர் 46.85 சராசரியுடன் 30 சதங்கள் உட்பட 9230 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு டி20 சர்வதேசப் போட்டிக்கு முன்பே விராட் கோலி ஓய்வு பெற்றார். இனி அவர் இந்தியாவுக்காக ஒருநாள் சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்.
இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு.
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வு பெற்றது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். இதற்கு முன்பு, ரோஹித் சர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றனர். விராட் கோலி கேப்டன்சியில், 68 டெஸ்ட் போட்டிகளில் 40 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக விராட் கோலி இருந்துள்ளார். விராட் கோலியின் இந்த சாதனையை முறியடிப்பது எந்த எதிர்கால கேப்டனுக்கும் மிகவும் கடினமாக இருக்கும்.கேப்டனாக, விராட் கோலி இந்தியாவுக்காக 68 டெஸ்ட் போட்டிகளில் 5864 ரன்கள் எடுத்துள்ளார், சராசரியாக 54.80. இந்திய டெஸ்ட் வரலாற்றில் கேப்டனாக அதிக ரன்கள் எடுத்த வீரர் விராட் கோலி ஆவார். அதேபோல் 7 இரட்டை சதங்களும் விளாசியுள்ளார்.
மேலும் படிங்க: பெங்களூரில் வெளுக்கும் மழை.. ஆர்சிபி – கேகேஆர் போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?
மேலும் படிங்க: ஐபிஎல்லில் மிகவும் மந்தமாக விளையாடிய 5 வீரர்கள்!