ஹைதராபாத்: ஹைதராபாத்தில் புகழ்பெற்ற சார்மினார் நினைவுச் சின்னம் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது.
இந்த விபத்து குறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “அதிகாலை 6,30 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் வந்தது. உடனடியாக அங்கு விரைந்தோம். தீயணைப்பில் 11 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. பலர் உயிரிழந்தனர். சிலரைக் காயங்களுடன் மீட்டோம். அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.” என்றார்.
மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, “சார்மினார் நினைவுச் சின்னம் அருகே நகைக் கடைகள் அதிகம் நிறைந்த குல்சார் ஹவுஸ் பகுதியில் ஒரு நகைக் கடைக்கு மேல் உள்ள வீட்டில் உள்ளோர் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நான் நேரில் சந்தித்தேன். இது ஒரு துயரச் சம்பவம். இந்த விபத்து தொடர்பாக நான் யாரையும் குறைகூற விரும்பவில்லை. ஆனால் காவல்துறையினர், நகராட்சி, தீயணைப்புத் துறையினர் என அனைவரும் எப்போதும் முழு பலத்துடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இன்று இந்த விபத்தில் வேகமாக செயல்பட, தீயணைப்புத் துறையிடம் போதிய உபகரணங்கள் இல்லை என்ற தகவலை அறிந்தேன். எதிர்காலத்தில் இதுபோன்ற துறையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி பெற்றுத் தருவது குறித்து நான் பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசவிருக்கிறேன்.” என்றார்.
முதல்வர் ரேவந்த் ரெட்டி, இந்த விபத்து குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்தியதோடு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கிட உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார்.
தெலங்கானா அமைச்சர் பொன்னம் பிரபாகர், “விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விரைவில் முழுத் தகவலையும் அரசு பகிரும்.” என்றார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஹைதராபாத் தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து வேதனை அடைகிறோம். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தோர் விரைவில் குணமடையட்டும். பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.