ஹைதராபாத் தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் பலியான சோகம்: நடந்தது என்ன?

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் பழைய நகரத்தில் உள்ள குல்சர் ஹவுஸ் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 8 பேர் குழந்தைகள். விபத்து நடந்த இடம் வரலாற்று நினைவுச் சின்னமான சார்மினார் அருகே இருக்கிறது. உயிரிழந்த அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தீ விபத்து குறித்து தெலங்கானா பேரிடர் மீட்பு மற்றும் தீயணைப்பு சேவைகள் இயக்குநர் ஜெனரல் நாகி ரெட்டி கூறுகையில், “குல்சார் ஹவுஸ் அருகில் உள்ள கிருஷ்ணா பேர்ல்ஸ் கடை மற்றும் வீடுகள் இருந்த கட்டிடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை 6,30 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் வந்தது. உடனடியாக அங்கு விரைந்தோம். தீயணைப்பில் 11 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. மக்களை மீட்க தீயணைப்புத் துறை சுவாசக் கருவிகள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களைப் பயன்படுத்தின.

இந்த கட்டிடத்தில் வெளியேறுவதற்கு 2 மீட்டர் அகலத்தில் குகை போல ஒரு பகுதி மட்டுமே இருந்தது. முதல் மற்றும் இரண்டாவது தளத்துக்குச் செல்வதற்கு ஒரு மீட்டர் அகல படிக்கட்டுகள் மட்டுமே உள்ளன. இவையெல்லாம் விபத்தின் போது வெளியேறுவதையும் மீட்புப் பணிகளையும் சிரமத்துக்குள்ளாக்கியது. கட்டிடத்தில் 21 பேர் இருந்தனர். அவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் மின்கசிவே தீ விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவரும் மூச்சித்திணறியே உயிரிழந்துள்ளனர். யாருடைய உடலிலும் தீ காயங்கள் இல்லை” என்று தெரிவித்தார்.

உயிரிழந்த பிஞ்சுகள்: தீ விபத்தில் உயிரிழந்த 8 குழந்தைகள் உட்பட 17 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் 10 வயதுக்கு கீழே உள்ளவர்கள். உயிரிழந்த குழந்தைகளில் மிகவும் இளையவர் பிரதான் (1.5) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்ற ஏழு பேர் விவரம், ஹமேன் (7), பிரியானேஷ் (4), இராஜ் (2), அருஷி (3), ரிஷப் (4), அனுயான் (3), இட்டு (4) .

நேரில் பார்த்த சாட்சி: விபத்தினை நேரில் பார்த்தவரான ஷஹித் கூறுகையில், “கட்டிடத்தின் பிரதான வாயில் தீப்பிடித்து எரிந்ததால் எங்களால் அதன்வழியாக உள்ளே நுழைய முடியவில்லை. அதனால் நாங்கள் ஷட்டரை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தோம். எங்களில் 5 -6 பேர் சுவரை உடைத்து முதல்மாடியை அடைந்தோம். ஆனால் அந்த இடம் முழுவதும் தீயால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

போலீஸாரும் தீயணைப்புத் துறையினரும் சிறப்பாக செயல்பட்டு ஒத்துழைத்தனர். பயங்கர தீ காரணமாக எங்களால் மக்களை காப்பாற்ற முடியவில்லை.உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். முக்கியமாக தீ வீட்டின் பின்பக்கமாக பற்றி எரிந்து கொண்டிருந்தது. அங்கே செல்வதற்கு வழி எதுவும் இல்லை.

முதல்வர் ரேவந்த் ரெட்டி இரங்கல்: பழைய ஹைதராபாத் நகரின் குல்சார் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆழ்ந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கும், காயம்பட்டவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றி சிறப்பான சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தீ விபத்து சம்பவம் குறித்து அமைச்சர் பொன்னம் பிரபாகரிடம் பேசி விவரங்களை அறிந்து கொண்ட முதல்வர், மீட்புப் பணிகளை தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்டார். மேலும் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மீட்பு பணிகளுக்காக எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, தனது இரங்கலை தெரிவித்தார். மேலும் அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் உறுதியளித்தார்.

ரூ.5 லட்சம் நிவாரணம் – துணைமுதல்வர்: குல்சார் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என்று தெலங்கானா துணைமுதல்வர் பட்டி விக்ரமார்க மல்லு அறிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய துணைமுதல்வர், “முதல்கட்ட தகவலின் படி, மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் காயம் அடைந்தவர்களின் மருத்துவச் செலவினை அரசு ஏற்றுக்கொள்ளும். மின்கசிவு அல்லது கேஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம். முதல்வர் ரேவந்த் ரெட்டி நிலைமையை உண்ணிப்பாக கவனித்து வருகிறார்.” என்று தெரிவித்தார்.

பிரதமர் இரங்கல்: முன்னதாக இன்று காலையில் குல்சார் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று அறிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.