உலர் பழங்கள் ஏற்றி வந்த ஆப்கானிஸ்தானின் 160 லாரிகளுக்கு அட்டாரி எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
ஆப்கானிஸ்தான், இந்தியா இடையிலான ஒருவழி வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் அனுமதி வழங்கி இருந்தது. இதன்படி, ஆப்கனிலிருந்து பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் வாஹா எல்லை வழியாக இந்தியாவுக்கு வரும். ஆனால் இந்தியாவிலிருந்து ஆப்கனுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான் அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து, பாகிஸ்தானை தரைவழியாக இணைக்கும் முக்கியமான அட்டாரி-வாஹா எல்லையை மத்திய அரசு மூடியது. இந்த சூழ்நிலையில், ஆப்கனிலிருந்து உலர்பழங்களை ஏற்றி வந்த 160 லாரிகள் அட்டாரி எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய மத்திய அரசு சிறப்பு அனுமதி வழங்கி உள்ளது. முன்னதாக வாஹா பகுதியைக் கடக்க பாகிஸ்தானும் அனுமதி வழங்கியது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினரின் ஆட்சி நடைபெறுகிறது. இதை பெரும்பாலான நாடுகள் அங்கீகரிக்கவில்லை. ஆனாலும், ஆப்கானிஸ்தான், இந்தியா இடையிலான இருதரப்பு உறவு வேகமாக வளர்ந்து வருகிறது. இதனிடையே, ஆப்கன் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தாகியுடன் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடந்த 15-ம் தேதி தொலைபேசியில் பேசினார். அப்போது இருதரப்பு வர்த்தக உறவை அதிகரிப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். தெற்கு ஆசியாவிலேயே ஆப்கன் பொருட்களுக்கான மிகப்பெரிய சந்தையாக இந்தியா விளங்குகிறது. ஆண்டு வர்த்தகம் ரூ.8,500 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.