இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல: உச்ச நீதிமன்ற பார்வையும், திருமாவளவன் கருத்தும்

புதுக்கோட்டை: “இலங்கைத் தமிழர் ஒருவரின் வழக்கில் ‘இந்தியா சத்திரம் அல்ல’ என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானது” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

வடகாடு மோதல் சம்பவத்தைக் கண்டித்து புதுக்கோட்டையில் விசிக சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “பிற நாடுகளில் இருந்து வருவோருக்கு எல்லாம் இடம் கொடுப்பதற்கு இந்தியா ஒன்றும் சத்திரம் அல்ல என்று இலங்கைத் தமிழர் ஒருவரின் வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறி இருப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானது.

புலம் பெயர்வது அனைத்து நாடுகளிலும் நிகழக் கூடியது. புலம் பெயர்வை சட்டத்தின் மூலமோ, எல்லைகளின் மூலமோ தடுத்துவிட முடியாது. மனிதாபிமானத்தின் அடிப்படையில் தஞ்சம் புகும் மக்களுக்கு அடைக்கலம் கொடுப்பது அரசின் தலையாய கடமை” என்று அவர் கூறினார்.

உச்ச நீதிமன்றம் கூறியது என்ன? – இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவர், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர் எனக் கூறி இந்தியாவில் கடந்த 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் 2018ம் ஆண்டு அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட போது அவரது தண்டனை 7 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. மேலும், தண்டனைக் காலம் முடிந்ததும் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தால் உத்தரவிட்டப்பட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில், “அகதிகள் முகாமிலேயே 3 ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன். என்னுடைய மனைவியும், குழந்தைகளும் இங்கேயே தங்கி உள்ளனர். தாய் நாடான இலங்கையில் நிலைமை மோசமாக உள்ளது. அங்கு எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை. எனவே, எனது தண்டனையை ரத்து செய்வதோடு, இந்தியாவிலேயே தங்கியிருக்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ஏற்கெனவே இங்கு 140 கோடி மக்களுடன் போராடி வருகிறோம். இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் கிடையாது. உலக நாடுகள் பலவற்றிலிருந்து இங்கு பலர் வந்து அகதியாகத் தங்கி வருகின்றனர். அனைவரும் வந்து தங்குவதற்கு இது தர்ம சத்திரம் கிடையாது.

உலக அகதிகள் அனைவரும் இங்கு வந்து தங்கலாம் என இந்திய அரசு அறிவித்துள்ளதா ? அனைத்து வெளி நாட்டினரையும் இங்கு தங்க வைக்க முடியாது. இங்கு அகதியாக வந்து தங்கியிருக்க உங்களுக்கு உரிமை கிடையாது. தண்டனைக் காலம் முடிந்ததும் இங்கு தங்கியிருக்க முடியாது. நீங்கள் வேறு நாட்டுக்குச் செல்லலாம்” என்று நீதிபதிகள் தெரிவித்து குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.